மலேசியா சென்றடைந்தார் தமிழருவி.சிவகுமாரன்
இலங்கையின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவரான தமிழருவி த.சிவகுமாரன் இம் மாதம்-09 மற்றும் 10 ஆம் திகதிகளில் மலேசியப் பல்கலைக்கழகமான சுல்தான் இத்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்து நடாத்தும் ஆறாவது பன்னாட்டுத் தமிழ்க் கல்வி ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்று இரு தினங்கள் சிறப்புப் பேருரைகள் ஆற்றுவதற்காக அழைக்கப்பட்டுள்ளார். இதனை முன்னிட்டு அவர் தற்போது மலேசியா சென்றடைந்துள்ளார்.
முதல் நாள் வள்ளுவத்தில் வாழ்வியல் கல்வி எனும் தலைப்பிலும், இரண்டாம் நாள் ஈழத்துக் கல்விப் பாரம்பரியத்தில் பண்டிதர், வித்துவான் வழிக் கற்பித்தல் மரபு எனும் தலைப்பிலும் சொற்பொழிவுகள் நிகழ்த்துவார். அத்துடன், கோலாலம்பூர், ஸ்கொட்ரோட் முருகன் ஆலயம், செரம்பான் அம்பாள் ஆலயம் ஆகிய ஆலயங்களில் சிறப்புரைகளையும், காஜாங் ஸ்ரீமுருகன் ஆலயத்தில் கந்தபுராண சாரம் எனும் தலைப்பில் சொற்பொழிவையும் நிகழ்த்துவார்.
மலேசியா பெற்றாலிங் ஜாயாவில் இடம்பெறும் காரை-மலாயா ஒன்றியத்தின் ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு காரைநகர் தந்த செல்வங்கள் எனும் தலைப்பில் சிறப்பு உரையாற்றுவார்.
இதேவேளை, தமிழருவி. சிவகுமாரன் கடந்த வருடமும் கனடா, லண்டன், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பல்வேறு நிகழ்வுகளுக்குப் பிரதம விருந்தினராகவும், சிறப்புப் பேருரையாளராகவும் அழைக்கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.