மலையக மக்களின் காணி உரிமை, வீடமைப்பு திட்டங்கள் மற்றும் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்கி உருவாக்கப்பட்ட ஒன்றியத்தின் சார்பில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனுடன் இணைந்து ஜனாதிபதியை நேரில் சந்தித்து மலையக மக்களின் நீண்டகால பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மலையக மக்களின் காணி மற்றும் வீடமைப்பு பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் தொடர்வதாக சுட்டிக்காட்டினார்.
இது அரசாங்கத்தை விமர்சிக்கும் விடயம் அல்ல என்றும், மாறாக நீண்டகாலமாக நிலவி வரும் கட்டமைப்பு ரீதியான பிரச்சினை என்றும் தெரிவித்தார்.
பெருந்தோட்ட நிறுவனங்களின் குத்தகை முறைமை காரணமாக காணிகளை விடுவிப்பதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதாக குறிப்பிட்ட அவர், காணிகள் விடுவிக்கப்பட்டாலும், தோட்டங்களில் பணிபுரிபவர்களுக்கு மாத்திரமே வீடமைப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் கூறினார்.
மலையக வீடமைப்பு திட்டத்திற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 5 பில்லியன் ரூபாய் நிதி போதுமானதாக இல்லை என்பதால், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கடந்த முறை ஒதுக்கப்பட்ட 7 பில்லியன் ரூபாய் நிதியில் 67 சதவீதம் இந்திய அரசாங்கத்தின் உதவியாக இருந்ததாக குறிப்பிட்ட அவர், மலையகப் பகுதிகளுக்கான இலங்கை அரசாங்கத்தின் நேரடி நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதாகவும் கூறினார்.
காணி வழங்கும் விடயம் சுலபமானது அல்ல என்றும், வளங்கள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் சவால்கள் உள்ளதாகவும் ஜனாதிபதி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டதாக தெரிவித்த அவர், மலையக மக்களுக்கு உறுதியான காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், மாகாண சபை என்பது தமிழர்களுக்கு மட்டும் உரித்தான விடயம் அல்ல என்றும், அது நாட்டின் அனைத்து மக்களினதும் ஜனநாயக உரிமைகளையும் அதிகாரப் பரவலாக்கத்தையும் பிரதிபலிக்கும் அமைப்பு என்றும் குறிப்பிட்டார்.
13 மாவட்டங்களில் சிறுபான்மையாக வாழும் மலையகத் தமிழ் மக்களுக்கு தற்போதைய விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் ஊடாகவே உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதாக தெரிவித்த ஜீவன் தொண்டமான், தேர்தல் முறைமை மாற்றப்பட்டால் சிறுபான்மையினரின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனவே, புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும் வரை தற்போதைய தேர்தல் முறையின் அடிப்படையில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பு சுமுகமாக நடைபெற்ற போதிலும், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பான நடைமுறை நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என்பதை எதிர்காலத்தில் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது என ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.