பெருந்தோட்டப்பகுதிகளில் இடம்பெறும் தாக்குதல்கள் உள்ளிட்ட மோதல் சூழ்நிலைகளுக்குக் காணி அடிப்படையிலான பிரச்சினைகளே காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதியினதும், பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்யாரத்ன அவர்களினதும் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் முன்னெடுப்பில் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான குழுவொன்றை நியமிக்கவும், இப்பிரச்சினைகளுக்கு நிலையானதொரு வேலைத்திட்டத்தைத் தயாரிக்க எதிர்பார்ப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்புச் சார்ந்த பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான விசேட சந்திப்பொன்று, பொதுப்பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் நேற்று பாராமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொதுப்பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல, பெருந்தோட்டக் கைத்தொழில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தொழிலாளர் விவகார பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உட்பட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

அத்துடன், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் மேல், தெற்கு, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட இலங்கை பொலிஸாரின் சிரேஷ்ட அதிகாரிகளும் தோட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தோட்ட நிர்வாகத்தினர் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டனர்.

தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள மலையக மக்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் கடந்த காலத்தில் காணிப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக அண்மைக்காலமாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திலும் வெளியேயும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தனர். இதற்கமைய, இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு மிக விரைவாகத் தலையீடு செய்வதாக அமைச்சர் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்ததுடன், பொலிஸாரின் தலையீட்டின் மூலம் அந்தத் தாக்குதல்கள் குறித்து மிக விரைவான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன.

இருப்பினும், இத்தாக்குதல்களுக்குக் காரணமாகக் காணி விவகாரங்கள் சார்ந்த முரண்பாடுகளே அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இப்பிரச்சினைகளுக்குத் நிலையானதொரு தீர்வை எட்ட வேண்டியது அவசியமாகும். எனவே, இது தொடர்பான அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி ஒரு தீர்வுக்கு வரும் நோக்கில், அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் முன்னெடுப்பில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, எந்தவொரு தரப்பினரும் சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்பட முடியாது. தோட்ட அதிகாரிகளைப் போன்றே தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் மக்களுக்கும் சட்டத்தின் முன்னால் சமமான உரிமை உண்டு என்றும்இ அனைத்துப் பிரச்சினைகளும் சட்டக் கட்டமைப்புக்குள்ளேயே தீர்க்கப்பட வேண்டும். இத்தகைய தாக்குதல்கள் குறித்துப் புகார்கள் கிடைக்கப் பெற்றால்இ தராதரம் பாராது சட்டத்தை நிலைநாட்டுமாறு பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்தார்.

இத்தாக்குதல்கள் உள்ளிட்ட மோதல் சூழ்நிலைகளுக்குக் காணி அடிப்படையிலான பிரச்சினைகளே காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இது குறித்து ஜனாதிபதியினதும், பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்யாரத்ன அவர்களினதும் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் முன்னெடுப்பில் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான குழுவொன்றை நியமிக்கவும், இப்பிரச்சினைகளுக்கு நிலையானதொரு வேலைத்திட்டத்தைத் தயாரிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.