மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (02) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இக்கலவரத்தின் போது சிறைக்கைதிகளால் மஹர சிறைச்சாலையின் சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் குறித்தும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

அதன்படி, சிறைச்சாலையின் சமையலறை , புனர்வாழ்வுக் கட்டிடம்,புனர்வாழ்வு அலுவலகம்,தலைமைச் சிறைக்காவலர் அலுவலகம் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை போன்ற பகுதிகள் சேதமடைந்துள்ளதுடன் முற்றிலும் விநாசமாகியுள்ளன.

இதேவேளை, குறித்த அமைதியின்மைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், அது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை (01) மாலையில் மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதற்கமைய, சிறைச்சாலைக்குள் தற்போது அமைதியான சூழல் நிலவுவதால், கைதிகளின் உறவினர்கள் அமைதியான முறையில் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு ஏ.சி. கஜநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.