மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது. மின்சாரம் மற்றும் எரிபொருள் தொடர்பில் அரசாங்கம் முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற 'வலுசக்தி துறையில் காணப்படும் பிரச்சினைகள்' தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் மின் கட்டணத்தை 13.8 வீதத்தால் அதிகரிப்பதற்காக மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த சுமையானது அடிமட்ட மக்களிடையே சுமத்தப்படும். வறுமைக் கோட்டில் இருக்கும் மக்கள் மிகவும் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம். 2021 மற்றும் 2022 காலங்களில் நாட்டில் மின்சாரம் மற்றும் எரிபொருள் காரணமாக ஏற்பட்ட பொருளாதார குழப்பங்களால் நாடு மிகவும் பின்தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. மீண்டும் இதுபோன்ற நிலைமை ஏற்படக்கூடாது.
இந்நிலையில் தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் மின்சார சபைக்கு 5 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டம் ஏழை மக்கள் மத்தியிலேயே சுமத்தப்படும். இதனால் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்வதனாலும் ஏனைய விடயங்களாலும் பாதிக்கப்படுவது எமது மக்களே ஆகும். இதனால் சரியான பொறிமுறையில் நிலக்கரி இறக்குமதியை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
இதேவேளை மழையினால் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றனர். அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர். இந்த காலக்கட்டத்தில் அவர்களுக்காக நெல் உலர்த்தும் இயந்திரங்களை பிரதேசங்களில் நிறுவினால் அவர்கள் நன்மையடைவர்.
விவசாயிகள் முழு சொத்துக்களையும் விற்று விவசாயம் செய்கின்றனர். இவர்களுக்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதுடன், அவர்களுக்கு நெல் உலர்த்தும் இயந்திரங்களுக்கு மின்சாரத்தை மானியமாக வழங்கக்கூடிய முறைமையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடி மீண்டும் வரக்கூடாது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space