நாட்டில் அடையாளங் காணப்பட்டுள்ள முக்கிய நகரங்களை, அவற்றின் மரபுரிமை மற்றும் தனித்துவ அடையாளங்கள் மேலோங்கும் வகையில் மாதிரி நகரங்களாக மறுசீரமைப்பதற்கும், நகர அபிவிருத்திகள் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரசித்தப்படுத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த விசேட வேலைத்திட்டத்திற்கான கூட்டு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையின் மனங்கவர் நகரங்களை சர்வதேச மட்டத்தில் மேம்படுத்துவதற்காக 2026ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 1,300 மில்லியன் ரூபா போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, முதற்கட்டமாக அநுராதபுரம், கதிர்காமம், கொழும்பு மற்றும் கண்டி ஆகிய நகரங்களின் விசேட இயல்புக்கூறுகளை மேலோங்கச் செய்யும் வகையில், தகுதிவாய்ந்த நிறுவனத்தின் வழிகாட்டல்களுக்கு இணங்க இக் கருத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்காக 2026ஆம் ஆண்டில் 325 மில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தித் துறையில் முறையான, முன்னுரிமைப்படுத்தப்பட்ட மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையை மேம்படுத்தும் நோக்கில் நகரங்கள் 10 அபிவிருத்தி வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, தம்புத்தேகம, சிலாபம், மாத்தளை, ஹட்டன், எஹலியகொட, பதுளை, மாத்தறை ஆகிய நகரங்கள் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட 10 நகரங்களிலும் அடையாளம் காணப்பட்டு, முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ள 217 அபிவிருத்திக் கருத்திட்டங்களை இவ்வாண்டுக்குள் துரிதமாக அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் எஞ்சிய 975 மில்லியன் ரூபாவுடன், ஹட்டன் மற்றும் மாத்தளை நகரங்களின் அபிவிருத்திக்கென ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த 500 மில்லியன் ரூபாவும் சேர்க்கப்பட்டு, மொத்தமாக 1,475 மில்லியன் ரூபா நிதியைப் பயன்படுத்தி இந்த 217 கருத்திட்டங்களையும் துரிதமாக அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியை வழங்கியுள்ளது.