புதுக்கோட்டையில் இன்று (நவ.2) நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்கிறார். இந்நிலையில், கடைசி நேரத்தில் இந்த விழா வேறு இடத்துக்கு திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கவும், ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கும் அரசு விழாவிலும் முதல்வர் விஜய் இன்று கலந்து கொள்கிறார்.

இதற்காக திருச்சி விமான நிலையத்தில் இருந்து திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை வரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தை திறந்து வைத்து விட்டு அங்கிருந்து ரோடு ஷோ மூலம் ஆயுதப்படை மைதானத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது என முதலில் திட்டமிடப்பட்டது.

இதற்காக ஆயுதப்படை மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல், சுமார் 2000 பேர் அமர்வதற்கான இருக்கை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வந்தன.

அதில், ஆயுதப்படை மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்த வேண்டாம் என முதல்வரின் பாதுகாப்பு படையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், அந்த இடத்தை கைவிட்டு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடத்த நேற்று இரவு திட்டமிடப்பட்டது

இது தொடர்பாக நேற்று நள்ளிரவில் திடீரென ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எம்.அருணா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

சுமார் 200 பேர் அமரக்கூடிய கூட்ட அரங்கில், சுமார் 100 பயனாளிகளுக்கு முதல்வர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடு பணிகள் நடைபெற்றன. அரசு விழா நடைபெற உள்ள இடம் திடீரென மாற்றப்பட்டதால் அலுவலர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.