“மேகேதாட்டுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது, எந்த கண்டனங்களுக்கும் அஞ்சமாட்டோம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியிருப்பது வரம்பு மீறிய செயல்” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்று இடத்தில் அணைகட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இயற்கை வழியில் கர்நாடகத்தில் உருவாகி, தமிழ்நாடு வழியாக வங்கக் கடலில் கலக்கும் காவிரி ஆற்றின் வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் பாதிப்பை தடுக்க கல்லணை கட்டப்பட்டது என்பது வரலாறு.

இதன் தொடர்ச்சியாக சென்னை மாகாண அரசுக்கும், மைசூரு சமஸ்தான அரசுக்கும் இடையில் 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் நதிநீர் பகிர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. இதன்படி 1974 ஆம் ஆண்டின் நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, புதிய ஒப்பந்தம் போடப்பட்டிருக்க வேண்டும்.

இரு மாநிலங்களுக்கு இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தும், கர்நாடகத்தின் பிடிவாதத்தாலும், ஒன்றிய அரசின் சார்பு தன்மை மற்றும் அலட்சியத்தாலும் தீர்வு எட்டப்படாத நிலையில் 1956 ஆம் ஆண்டு மாநிலங்களிடையிலான நதிநீர் தாவாச் சட்டத்தின் கீழ் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

காவிரி பாசன மாவட்டங்களிலும், காவிரி ஆற்றின் நீராதாரத்தை அடிப்படையாக் கொண்டு குடிநீர் வசதி பெற்றுள்ள மாவட்டங்களும் தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமைக்காக போராட்டங்களை முன்னெடுத்தன. 1989 ஜூன் 12 ல் நடைபெற்ற தஞ்சை முதல் வேதாரண்யம் வரையிலான 110 கிலோ மீட்டர் தூரம் வரை அமைந்த மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் குறிப்பிடத்தக்கது.

இதன் பிறகு, வி. பி .சிங் தலைமையில் அமைந்த தேசிய முன்னணி ஒன்றிய அரசு நடுவர் மன்றம் அமைத்தது. நடுவர் மன்றம் 2007 ஆம் ஆண்டில் இறுதித் தீர்ப்பு வழங்கியது. இதன் மீதான மேல் முறையீடுகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டில் இறுதித் தீர்ப்பு வழங்கியது.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிலும், உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிலும் காவிரி ஆற்றின் நீரோட்டத்தில், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக அரசு எந்தவொரு மாற்றமும் செய்யக் கூடாது என திட்டவட்டமாகவும், தெளிவுபடவும் கூறப்பட்டுள்ளது.