முதல்வர் விஜய் குறித்து விமர்சனம்: சேகர்பாபுவுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்
Ad Space
Ad Space
Ad Space
சென்னையில் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, முதல்வர் விஜய், அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோர் குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: “ஆபாசம், அவதூறு, தரக்குறைவான பேச்சு, மிரட்டல் இவைதான் அரசியல் ஆயுதங்கள் என்று நினைத்துக்கொண்டு செயல்படும் கட்சி தமிழகத்தில் திமுகவைத் தவிர வேறு எதுவும் இல்லை.குறிப்பாக, இறைவனுக்கு சேவை செய்யும் இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சராக இருந்த ஒருவர், அந்தப் பதவியின் மாண்பையும், பொது வாழ்க்கைக்கான குறைந்தபட்ச நாகரிகத்தையும் மறந்து, வாய்க்கு வந்தபடி தரக்குறைவாக பேசுவதும், மாற்றுக் கட்சியினரை அவமதிப்பதும், பொதுமக்களையே அச்சுறுத்துவது போன்ற செயல்களும் அவரது அரசியல் தரத்தை தொடர்ந்து வெளிப்படையாக காட்டுகிறது.அமைச்சர் பதவி என்பது அதிகாரத்தை காட்டுவதற்கான பதவி அல்ல. அந்தப் பொறுப்பில் முன்பு இருந்த ஒருவர் இன்று மூன்றாம் தர அரசியல் பேச்சாளரைப் போல நடந்து கொள்வது வெட்கக்கேடானது. எங்களை யாரும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது. அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. ஒருவர் எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசுகிறாரோ, அதைவிட கீழே இறங்கி பதிலளிப்பது எங்கள் அரசியல் பண்பாடு அல்ல.எங்கள் முதல்வர் அப்படி எங்களை வளர்க்கவும் இல்லை. எனவே, வார்த்தைகளை அளந்து பேசட்டும். இல்லையென்றால், அவர்கள் தொடங்கிய அதே அரசியல் மொழியில் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கீர்த்தனா, வினோத் ஆகியோரும் சேகர்பாபு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Ad Space
Ad Space
Ad Space