உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னதாக கருத்துகளை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட பாராளுமன்றத்தில் இருந்த மக்கள் பிரதிநிதிகள் முன்வந்து தமக்குத் தெரிந்த தகவல்கள், தங்களுக்கு கிடைத்த தகவல்கள் மற்றும் தாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை என அருட்தந்தை ரொஹான் டி சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள சமூக மற்றும் சமய மையத்தின் காரியாலயத்தில் 'நீதிக்காக மட்டும்' எனும் தொனிப்பொருளில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு பேரழிவு தொடர்பான ஏனைய வழக்கு விசாரணைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக, இந்தத் தீவிரவாதக் குழுக்களைப் பயன்படுத்தி பேரழிவை ஏற்படுத்திய உண்மையான மூளையாகச் செயற்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன. இந்தப் பின்னணியில் சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் புலனாய்வுத்துறை சார்ந்த தரப்பினர் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களும் முன்வைக்கப்படுகின்றன.

எனவே, இந்த விசாரணைகள் சஹ்ரான் ஹஷீமுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், இதன் பின்னணியில் உள்ள உயர் மட்டத் தொடர்புகள் மற்றும் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதையும் கண்டறிய வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் தகவல்களை வெளியிட்டவர்கள் தற்போது முன்வந்து தங்களிடம் உள்ள தகவல்களை விசாரணையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்டோர் தாங்கள் அறிந்த விடயங்கள், தங்களுக்கு கிடைத்த தகவல்கள் மற்றும் முன்னதாக முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை வழங்க வேண்டும்.

சுரேஷ் சலே தொடர்பாக பாராளுமன்றத்தில் முதலில் கருத்து வெளியிட்டவர்கள் மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆவர். அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்த தகவல்கள் தொடர்பாகவும், தங்களிடம் உள்ள மேலதிக தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் தொடர்பாகவும் விசாரணையாளர்களிடம் சாட்சியமளிக்க வேண்டும்.

அதேபோன்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னதாக பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் சாட்சியமளித்துள்ளார். எனவே, அவர் அறிந்த விடயங்கள் மற்றும் தமக்கு கிடைத்த தகவல்கள் தொடர்பாகவும் விசாரணையாளர்களிடம் முழுமையாக தெரிவிக்க வேண்டும்.

இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்றத்திலோ அல்லது அதற்கு வெளியிலோ கருத்துகளை வெளியிட்ட அனைவரும் தாங்கள் கூறிய விடயங்களுக்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். இது ஒருவரை குற்றவாளியாக்குவதற்காக அல்ல. உண்மையை கண்டறிந்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்தத் தகவல்கள் அவசியமாகின்றன.சுரேஷ் சலே தொடர்பான வழக்கு உள்ளிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய ஏனைய வழக்குகளும் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன. அவற்றில் உண்மையான தகவல்கள் வெளிப்பட வேண்டும். அதற்காக முன்னதாக தகவல்களை வெளியிட்டவர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைத்து சாட்சியங்களை வழங்குவது முக்கியமானதாகும்.

மேலும், இந்தத் தாக்குதல் தொடர்பாக கடந்த காலங்களில் பொதுவெளியில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தெளிவான பதிவுகள் உருவாக்கப்பட வேண்டும். யார் எந்தத் தகவலை எப்போது பெற்றனர், அந்தத் தகவல் எவ்வாறு கிடைத்தது, அது தொடர்பாக எந்த நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டது என்பனவும் விசாரணைகளின்போது வெளிப்படுத்தப்பட வேண்டும். இதன்மூலம் முன்னதாக முன்வைக்கப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையை பரிசோதிப்பதற்கும், விசாரணைகளுக்குத் தேவையான புதிய தடயங்களை அடையாளம் காண்பதற்கும் வாய்ப்பு ஏற்படும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நீண்டகாலமாக உண்மையையும் நீதியையும் எதிர்பார்த்து வருகின்ற நிலையில், தகவல்களை அறிந்தவர்கள் முன்வந்து ஒத்துழைப்பது அவர்களுக்கான நீதிப் பயணத்தை முன்னெடுக்க உதவும். எனவே, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து உண்மையை வெளிப்படுத்தும் நோக்கில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.