இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) மற்றும் அதன் அங்கத்துவ கூட்டமைப்புகளான இலங்கை பத்திரிகை வெளியீட்டாளர் சங்கம் (NSSL), இலங்கை பத்திரிகையாசிரியர் சங்கம் (TEGOSL), சுதந்திர ஊடக இயக்கம் (FMM), இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் (SLWJA) ஆகியவை, அத்துடன் இணைந்த அமைப்புகளான இலங்கை முஸ்லிம் மீடியா ஃபோரம் (SLMMF), தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் (TMA), ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் (FMETU), தெற்காசிய சுதந்திர ஊடக சங்கம் (SAFMA) ஆகியவை முன்மொழியப்பட்ட இலங்கை ஊடக  உயர்தொழிலர்களின் பட்டயம்பெற்ற நிறுவகம் (CIMP) சட்டமூலத்திற்கு தமது எதிர்ப்பை தெரிவிக்கின்றன.

இந்த முயற்சி அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுவதே எமது முதன்மையான ஆட்சேபனைக்கு காரணமாகும். பொறியியலாளர் நிறுவனம், இலங்கை கட்டிடக்கலை நிறுவனம் போன்ற வலுவான தொழில்முறை அமைப்புகள் தொழில்முறையினராலேயே உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்ட பின்னரே பாராளுமன்றத்தால் இணைக்கப்பட்டன என்பதை வரலாறு காட்டுகிறது.

ஆனால், ஊடகத் தொழில்முறை அமைப்புகள் எழுப்பிய ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்ட ஒரு அரசு-ஆதிக்க திட்டமாக CIMP உள்ளது.

அரசாங்கத்தின் தலையீட்டிலிருந்து சுதந்திரமாக இயங்க வேண்டிய ஒரு தொழிலின் மீது அரசு-நிர்வகிக்கும் ஒழுங்குமுறை கட்டமைப்பை திணிக்கும் முயற்சியாகவே இதை நாங்கள் கருதுகிறோம்.

தொழில்முறை ஊடக தரநிலைகள் கொள்கையளவில் தன்னியல்பாக ஒழுங்குபடுத்தப்பட்டு, ஊடக சமூகத்தாலேயே வழிநடத்தப்பட வேண்டுமே தவிர, அமைச்சர் மேற்பார்வையின் கீழ் சட்டத்தால் வழிநடத்தப்படக் கூடாது என SLPI, அதன் அங்கத்துவ மற்றும் இணைந்த அமைப்புகள் வலியுறுத்துகின்றன. இணை-ஒழுங்குமுறை மற்றும் சுய ஒழுங்குமுறைக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட, தொழில்முறையை மேம்படுத்தும் வழிமுறையாக இலங்கை ஊடக ஆணைக்குழு (SLMC) இனை ஒரு மாற்று வழிமுறையை SLPI முன்வைத்துள்ளது.

மேலும், ஊடகத் தொழில்முறையை மேம்படுத்துதலே அரசாங்கத்தின் உண்மையான  நோக்கமாக இருந்தால், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகவியலாளர்களுக்குப் பயிற்சி அளித்து ஊடகத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கை ஊடகவியல் கல்லூரியிற்கு, நிதியுதவி வழங்குவதன் மூலம் ஊடகத் தரநிலைகளை உருவாக்கும் மாற்று வழியாக அமைத்துக் கொள்ளலாம்.

இந்த சட்டமூலத்தினை திரும்பப் பெற்றுக்கொண்டு, ஒரு ஜனநாயகத்தில் ஊடகங்களின் சுயாட்சியையும் சுதந்திரத்தையும் மதிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் உண்மையான உரையாடலில் ஈடுபடுமாறு அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.