திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் புதன்கிழமை (31) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உப பொலிஸ் பரிசோதகர், குற்றச் செயலுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக முறைப்பாட்டாளரிடம் 10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக கோரியுள்ளார்.
இது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உப பொலிஸ் பரிசோதகர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரை திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.