முஸ்லிம் மக்கள் மீது அக்கறை காட்டுவதுபோல் அரசாங்கம் திடீரென செயற்பட்டு வருகிறதை காண்கிறோம். உண்மையில் அரசாங்கத்ததிற்கு முஸ்லிம்கள் மீது அக்கறை இருக்குமாக இருந்தால் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி காட்டுமாறு கோரிக்கை விடுக்கிறேன் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

தித்வா புயலால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஏனையவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ள போதும், மீனவர்களுக்கு எமது மாவட்டத்தில் இன்னும் நிவாரண ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதனால் தயவு செய்து இங்கு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம்.

இதேவேளை இப்போது ஒவ்வொரு பிரதேசத்திற்கும் பிரஜா சக்தி தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனூடாக அரசாங்கம் என்ன விடயத்தை எதிர்பார்க்கின்றது என்பதனை அறிந்துகொள்ள விரும்புகின்றோம். ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அந்தந்த பிரதேசங்களில் இருக்கின்றனர். இந்நிலையில் பிரஜாசக்தி என்று அரசாங்கத்துடன் தொடர்புபடுத்தி கட்சி செயற்பாடுகளை வளர்ப்பதற்காக நீங்கள் இதனை செய்கின்றீர்களா என்று கேட்கின்றோம். அங்கு ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்களுக்கு உரிய கௌரவத்தை வழங்க வேண்டும் என்று கோருகின்றோம்.

ஆளும் கட்சியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்து கூறும் போது எதிர்க்கட்சியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாக இருக்கின்றார்கள் என்று கூறியிருந்தார். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது எதற்காக நடத்தப்பட்டது என்பதனை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

அது பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டது. முஸ்லிம் சமூகம் பிரச்சினைகளுக்கு உள்ளாகி சமுகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டவர்களாக முஸ்லிம்களை இந்த சம்பவம் மாற்றியிருந்தது. இந்த விடயத்தில் நாங்கள் அமைதியாக இருக்கின்றோம் என்று கூறுகின்றனர். ஆனால் நாங்கள் இதற்கு முன்னர் பல விடயங்களை கூறியுள்ளோம். நாங்கள் இதுபற்றி எத்தனையோ தடவை கதைத்துள்ளோம். ஆனால் எதிர்க்கட்சியென்று யாரை நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் கூறும் நபர்களை மக்களே புறம்தள்ளியுள்ளனர். கடந்த தேர்தலில் அவர்கள் தோல்வியடைந்துள்ளனர். தேசியப் பட்டியல் மூலமே சிலர்  இங்கே வந்துள்ளனர். நாங்கள் இந்த விடயத்தில் அரசியல் செய்யப் போவதில்லை.

இன்று பொருளாதார நெருக்கடி நிலைமையில் மக்கள் ஒவ்வொரு மாதத்தையும் எவ்வாறு கடத்துகின்றனர் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும். இதனை மறக்கடிக்க நீங்களும் நாடகமாட பயன்படுத்துவதே இந்த விடயம். இப்போது முஸ்லிம்கள் மீது நீங்கள் அக்கறை கொள்ள காரணம் என்ன? நீங்கள் உண்மையாக முஸ்லிம் சமூகத்திற்கு நன்மை செய்துள்ளீர்கள் என்றால், முஸ்லிம் மக்கள் உங்களுடன் இருக்கின்றனர் என்பதனை நெஞ்சை நிமிர்த்தி கூறுவீர்களாக இருந்தால், கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள். அப்போது முஸ்லிம் மக்கள் கிழக்கில் வெல்லப் போகின்றவர்கள் யார் என்பதனை காட்டுவார்கள் என்றார்.