சவூதி அரேபியா மற்றும் ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையே பரஸ்பர வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள போதிலும், மேற்காசியாவிலிருந்து மசகு எண்ணெயைச் சந்தைக்குக் கொண்டு வருவதற்கு மாற்று வழிகள் காணப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் 1 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளன. எனினும், எண்ணெய் விலை தொடர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர்களுக்கு மேலாகவே நீடிக்கிறது.இன்று வெள்ளிக்கிழமை (18) சர்வதேச சந்தையில் பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 1.01 அமெரிக்க டொலராக (1%) சரிந்து 103.77 அமெரிக்க டொலராக ஆகப் பதிவாகியுள்ளது.   அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் மசகு எண்ணெய்  பீப்பாய் ஒன்றுக்கு 1.03 அமெரிக்க டொலராக  (1%) சரிந்து 100.88 அமெரிக்க டொலராக ஆகப் பதிவாகியுள்ளது.   கடந்த வியாழக்கிழமை இவ்விரு சர்வதேச மசகு எண்ணெய் விலைகளும் 1 சதவீதம் வரை சரிவைச் சந்தித்த நிலையில், தொடர்ச்சியாக 3-வது நாளாகவும் இந்த விலை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.சவூதி அரேபியா மற்றும் ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையே எல்லையோரத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள போதிலும், சந்தைகள் இந்த விநியோக அச்சுறுத்தல்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.சவூதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் வழியில்  கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று உந்தி நிலையங்கள் சேதமடைந்தன. இதனால் யான்பு  ஏற்றுமதி முனையத்திற்கான விநியோகம் நிறுத்தப்பட்டு, ஐரோப்பிய நாடுகளுக்கான சில ஏற்றுமதிகளும் இரத்து செய்யப்பட்டன. இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4 சதவீத பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்பட்டதால், இவ்வார தொடக்கத்தில் எண்ணெய் விலைகள் 4 மாதங்களில் இல்லாத அளவை எட்டியுள்ளன.இருப்பினும், சவூதி அரேபியா ஓமானின் சோஹார்  துறைமுகத்திற்கு அருகில் 'கப்பலுக்குக் கப்பல் மாற்றுதல்' முறையைப் பயன்படுத்தி ஆசிய நாடுகளுக்குக் கூடுதல் மசகு எண்ணெயை வழங்கி வருகிறது. மேலும், சேதமடைந்த கிழக்கு-மேற்கு குழாய் வழியின் 50 சதவீத கொள்ளளவைச் சில நாட்களுக்குள் மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக சட்டவிரோதமாகப் பயணிக்க முயன்ற டோகோ நாட்டுக் கொடியுடனான எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகரக் காவல் படை தெரிவித்துள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட இடைக்கால உடன்படிக்கை முறிந்ததைத் தொடர்ந்து, அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் இப்போர்ப் பதற்றம் குறித்து விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.