நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அரசாங்கத்தை வீழ்த்தும் போராட்டத்தில் அவர்களுடன் இணைந்துசெயற்படுவதற்கு தனிப்பட்ட ரீதியில் எனக்கு உடன்பாடில்லை. அவ்வாறான இடத்தில் நான் இருக்கப்போவதும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
ஆட்சியில் இருக்கும் இடதுசாரி அரசாங்கத்தை வீழ்த்துவதாக இருந்தால், வலதுசாரி சக்தி ஒன்று வரவேண்டும். அதற்காக வலதுசாரிகளை ஒன்றிணைப்பதே எமது நோக்கமே தவிர, எமது அரசியல் அடையாளங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை.
என்றாலும் அரசாங்கத்தின் பிழையான நடவடிக்கைகளின்போது, அந்த நடவடிக்கைகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட முடியும். இதன்போது எமது அரசியல் கொள்கைக்கு மாற்றமாக செயற்படும் எந்த எண்ணமும் எமக்கில்லை.
அரசாங்கம் மேற்கொள்ளும் பிழையான நடவடிக்கைகளில் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளில் நாங்கள் நாமல் ராஜபக்ஷ்வினருடன் இணைந்து தீர்மானங்களை எடுக்க முடியும். குறிப்பாக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
அதனால் நாங்கள் அவர்களுக்கு எதிராக இதற்கு முன்னர் தெரிவித்துவந்த குற்றச்சாட்டுக்கள் இன்றைக்கும் செல்லுபடியாகும். அரசியல் ரீதியில் அவர்கள் அவர்களுடைய அரசியலை மேற்கொள்ளவேண்டும். நாங்கள் எமது அரசியலை மேற்கொள்ளவேண்டும். அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற விடயத்தில் தனிப்பட்ட ரீதியில் நான் அதற்கு விருப்பம் இல்லை. அவ்வாறான இடத்தில் எனக்கு இருக்கவும் முடியாது.