மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வாகனங்களைப் பதிவு செய்தமை உள்ளிட்ட பல்வேறு மோசடிகளுடன் தொடர்புடைய மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் உதவி ஆணையாளர் உள்ளிட்ட மூவர் வெள்ளிக்கிழமை (26) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் நேற்றைய தினம் காலை 09:05 மணி முதல் 09:25 மணி வரையான காலப்பகுதிக்குள் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் சட்டப்பூர்வமான ஆரம்பப் பதிவு இல்லாத மூன்று வாகனங்களை, சட்டவிரோதமான முறையில் உரிமம் மாற்றம் செய்வதற்குத் துணை நின்றதாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய முன்னாள் உதவி ஆணையாளர் குறித்த மூன்று வாகனங்களின் சட்டவிரோத உரிமை மாற்றங்களுக்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், முன்னாள் அபிவிருத்தி உதவியாளர் (சாலை பாதுகாப்பு) சட்டப்பூர்வமற்ற முறையில் குறித்த வாகனங்களின் தரவுகளை கணினி அமைப்பில் உள்ளிட்டமை தொடர்பிலும், முன்னாள் விசாரணை உதவியாளர் இந்த வாகன மோசடிக்காக சாளர இலக்கங்களை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.