யாழ்.மாவட்டத்தில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், இந் நோயைக் கட்டுப்படுத்துவதற்குச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர்-ஆர். சுரேந்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்.மாவட்டத்தின் சுமார் ஆறு லட்சம் மக்கள் தொகையில் இரண்டு லட்சம் பேர் வரை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட நீரிழிவுக் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு மருத்துவ முகாம் நிகழ்வை சனிக்கிழமை (14.11.2026) பிரதி மாகாணச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.உமாசங்கருடன் அதிதியாகக் கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்த பின் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீரிழிவு நோய் உலகளாவிய ரீதியில் பாரிய சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன் எமது சமூகத்திலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இது ஆரம்பத்தில் வெளிப்படையான அறிகுறிகள் இன்றி உடலின் முக்கிய உறுப்புக்களைப் பாதிக்கக் கூடிய நோயாக இருப்பதால் மௌனக் கொல்லியாக உருவெடுக்கின்றது.
இலங்கையில் நீரிழிவு நோயின் பரவல் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆய்வுகளின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 03 முதல் 04 வீதமாகவிருந்த இந் நோய் தற்போது 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களின் முயற்சிகள் மாத்திரம் போதுமானதல்ல. சமூக அமைப்புக்கள், உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது அவசியம். அப்போது தான் எதிர்காலச் சந்ததியினரை நீரிழிவு நோயின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.