ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையானது ஒரு தனிநபரை இல்லாதொழிப்பதை மாத்திரம் நோக்கமாகக் கொண்டதல்ல. மாறாக அது அரசியல்வாதிகள், ஊழல்வாதிகள் மற்றும் பலம்பொருந்திய சக்திகளின் நலன்களை சவாலுக்கு உட்படுத்தத் தயாராக இருந்த ஏனைய ஊடகவியலாளர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் எச்சரிக்கை விடுப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது என இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்ட 'சன்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க பற்றிய நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் வெளியிட்டு நிகழ்வு வெள்ளிக்கிழமை (25) கொழும்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ரங்க திசாநாயக்க, லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையானது ஊடகவியலாளர்களுக்கான ஒரு வலுவான எச்சரிக்கையாக அமைந்ததாகக் குறிப்பிட்ட அவர், 'அதாவது நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருங்கள். பலம்பொருந்திய சக்திகளின் நலன்களுக்கு சவால் விடுக்காதவாறு  செய்திகளைச் சேகரியுங்கள். அவற்றிலிருந்து மாறுபட்டு இருப்பதற்கு முயற்சிக்காதீர்கள்' என்தே அந்த எச்சரிக்கையாகும் எனச் சுட்டிக்காட்டினார்.

'லசந்த விக்ரமதுங்கவை இல்லாதொழிக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காக மாத்திரமே அவர் கொல்லப்பட்டார் என நினைக்கிறீர்களா? இல்லை, அது லசந்த போன்ற சகலருக்கும் விடுக்கப்பட்டதோர் செய்தியாகும்' என்று ரங்க திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் வரலாறு முழுவதும் ஊழல்களுக்கும், வலுவாக நிறுவப்பட்ட சிலரது நலன்களுக்கும் எதிராகத் தனிநபர்கள் குரலெழுப்பிய சந்தர்ப்பங்களில் எல்லாம் இதுபோன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், பேராசிரியர் சேனக பிபிலே மற்றும் சுங்கப்பிரிவு அதிகாரி சுஜித் பிரசன்ன ஆகியோரின் அனுபவங்களை உதாரணமாகக் காண்பித்தார். அதுமாத்திரமன்றி தனிநபர்கள் மீதான தாக்குதல்கள், அவர்களது சகாக்களையும் அவர்களைப்போன்ற ஏனையவர்களையும் இவ்வாறான துணிகரப் பணிகளைத் தொடர்வதிலிருந்து பின்வாங்கச் செய்யும் என்றார்.

'பிழைகளை சவாலுக்கு உட்படுத்துவது உங்களது உயிரைப் பணயம் வைப்பதை விடவும் மேலானதா என குடும்பத்தினர் உள்ளிட்ட பிறர் கேள்வி எழுப்புவதனால், இவ்வாறான சம்பவங்களின் விளைவுகள் நேரடியாகப் பாதிப்புக்கு உள்ளாகுபவரை விடவும் பரந்துபட்டவையாக இருக்கின்றன. சுங்கப்பிரிவு அதிகாரியொருவர் கொல்லப்பட்டதை அடுத்து இந்த அச்சத்தின் தாக்கம் தெளிவாகப் புலப்பட்டது. அதனையடுத்து சுங்கத்தில் பணியாற்றும் அதிகாரிகள் பலர் நாட்டைவிட்டு வெளியேறியதுடன், விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குப் பெரிதும் தயங்கினர்' என்றும் ரங்க திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த நிலைமை மாற்றியமைக்கப்படவேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், 'லசந்த கொல்லப்பட்டதன் பின்னர், இன்னும் பல லசந்த உருவாகியிருந்தால், அவர்கள் கூறமுற்பட்ட எச்சரிக்கை செய்தி தோல்வியடைந்திருக்கும். ஆனால் லசந்த கொல்லப்பட்டதன் பின்னர், அவரைப்போன்ற பலர் அடக்கப்பட்டதனால் அவர்களது நோக்கம் வெற்றியடைந்தது' என்றார்.