நாட்டில் போதுமான நெல் மற்றும் அரிசி இருப்புக்கள் இருக்கும் வேளையில், வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவின் தொலைநோக்கற்ற தீர்மானங்களால் உள்நாட்டு அரிசித் தொழிலும் விவசாயிகளும் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தேசிய விவசாய ஒற்றுமை ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய விவசாய ஒற்றுமை ஒன்றியத்தின் காரியாலயத்தில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:
அமைச்சர் வசந்த சமரசிங்க வர்த்தகத்தின் மூலம் நுகர்வோரை திருப்திப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, வெளிநாட்டு விவசாயிகளின் பொருளாதாரத்தையே வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார். கடந்த சிங்களப் புத்தாண்டு காலத்தில் 2,700 அல்லது 4,000 மெட்ரிக் தொன் கீரி சம்பா அரிசி மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அதற்குப் பதிலாக இரண்டு மாதங்களுக்குத் தேவையான சுமார் 25,000 மெட்ரிக் தொன் அரிசியை சுங்கத்திலிருந்து விடுவித்துள்ளனர். இது தேவையை விட 20 மடங்குக்கும் அதிகமான தொகையாகும்.
இந்த முட்டாள்தனமான முடிவினால் உள்நாட்டு அரிசித் தொழில் இன்று முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டில் தற்போதுள்ள பெரும்போகம் மற்றும் சிறுபோக அறுவடைகளின் படி, மொத்த நெல் இருப்பு சுமார் 3.6 மில்லியன் மெட்ரிக் தொன் ஆகும். ஆண்டு முழுவதும் தேவையான நெல் இருப்பு இருக்கும்போது, அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அதிகாரிகள் மற்றும் அமைச்சரின் ஊழல் மற்றும் கமிஷன் பெறும் நோக்கம் கொண்ட பரிவர்த்தனைகளுக்காகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். கடந்த அரசாங்கங்களைப் போலவே, தற்போதைய அரசாங்கத்திலும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் இந்தச் செயற்பாட்டால், நெல் விவசாயி முதல் சிறு, நடுத்தர மற்றும் பெரும் அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் வரை அனைவரும் கடும் துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
நாமல் பிரதி அமைச்சரின் தொகுதியில் கூட, ஒரு கிலோ நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். அனுராதபுரம், பொலன்னறுவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நெல் விவசாயிகளால் தமது விளைபொருட்களை விற்க முடியவில்லை. எதிர்காலத்திலும் அரிசியை இறக்குமதி செய்யப் போவதாக அமைச்சர் வெளியிடும் கருத்துக்கள், இந்த அரிசித் தொழிலையும் விவசாயிகளையும் மேலும் படுகுழியில் தள்ளுவதற்கே வழிவகுக்கும்.
கடந்த காலங்களில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு இறக்குமதியால் அந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அந்த நிலை இப்போது நெல் விவசாயிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. எமது ஒரே கோரிக்கை, இந்த அரிசி இறக்குமதியை உடனடியாக நிறுத்துங்கள் என்பதே. தொடர்ந்தும் அரிசியை இறக்குமதி செய்தால், அது இந்த நாட்டின் விவசாயிகளின் மரணமாகவே கருதப்படும். அந்த மரணத்தில் அமைச்சரின் அரசியல் மரணமும் அடங்கும்.
வசந்த சமரசிங்க நாட்டின் உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் பாதுகாக்க முடியாவிட்டால், அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக வேண்டும். அரிசி இறக்குமதியை நிறுத்தவில்லை என்றால், விவசாயிகளின் பலத்தை வீதியில் இறக்கி அதைத் தடுக்க நடவடிக்கை எடுப்போம். அதற்காக எந்தவொரு தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். கடந்த கால அரிசி இறக்குமதியின் போது கீரி சம்பாவுக்குப் பதிலாக பொன்னி சம்பா, சிவப்பு அரிசி என பல்வேறு வகை அரிசிகள் கொண்டு வரப்பட்டுள்ளனவா என்பது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றார்.