விருந்துக்கு அழைத்துவிட்டு, விருந்து முடிந்ததும், அந்த விருந்தினர்களிடமே விருந்துச் செலவுக்கான பில்லை நீட்டினால் எப்படி இருக்கும்? அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பேச்சால் கிட்டத்தட்ட அதே போன்றதொரு இக்கட்டான சூழலில் இன்று இஸ்ரேலும் வளைகுடா நாடுகளும்  சிக்கியுள்ளன.

போர் எப்போதும் அழிவை மட்டுமே தருவதில்லை. சில நேரங்களில் அது அரசியல் கணக்குகளையும் மாற்றி எழுதுகிறது. எட்டு மாதங்களாக நீடித்த ஈரான் போரால் அமெரிக்கா தனது அதிநவீன ஏவுகணைகளையும், பல ஆயிரம் கோடி டாலர் வரிப்பணத்தையும் இழந்ததோடு, உள்நாட்டில் நடந்த இடைக்காலத் தேர்தலிலும் ஆளும் குடியரசுக் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

வாக்காளர்களின் கோபத்தையும், பொருளாதார நெருக்கடியையும் சமாளிக்க முடியாமல் திணறும் ட்ரம்ப், இப்போது ஒரு புதிய வியூகத்தைக் கையிலெடுத்துள்ளார்.

“நாங்கள் பாதுகாத்து இருக்காவிட்டால் இஸ்ரேலும் வளைகுடா நாடுகளும் இன்று இல்லாமல் போயிருக்கும். அதனால் முழுப் போர்ச் செலவையும், 100 சதவீத இழப்பீட்டையும் அவை திருப்பித் தர வேண்டும்” என  திடீர் ‘வசூல் ராஜா’வாகக் களம் இறங்கியிருக்கும் அவரின் பேச்சு, உலக அரங்கில் அமெரிக்காவின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.

ட்ரம்ப்பின் இந்த சர்ச்சைப் பேச்சும், 100 சதவீத இழப்பீடு கேட்கும் அவரின் முரணான கோரிக்கையும் மத்திய கிழக்கு அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளன. தேர்தல் தோல்வி, போர் நெருக்கடியில் இருந்து தப்பிக்க ட்ரம்ப் விரிக்கும் இந்த அரசியல் வலையின் முழுப் பின்னணியையும் விரிவாகப் பார்க்கலாம்.

ஈரான் - அமெரிக்கா போர்

இந்த ஆண்டு (2026) பிப்ரவரி 28-ல் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முழுமையாகப் போரில் இறங்கின. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி மற்றும் முக்கியத் தளபதிகள் அமெரிக்க ஏவுகணை வீச்சில் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் தகர்க்கப்பட்டன.

இதற்கு பதிலடியாக ஈரானும் ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4’ என்ற பெயரில் இஸ்ரேல் மற்றும் பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்த அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி அவைகளைச் சின்னாபின்னமாக்கியது. இந்தப் போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. ஹார்முஸ் நீரிணையில் அவ்வப்போது சிறு தாக்குதல்கள் தொடர்வதால் போர் அபாயம் இன்னும் நீடிக்கிறது.

அமெரிக்காவின் போர் செலவு:

பென்டகன் மற்றும் சிஎஸ்ஐஎஸ் (CSIS) அறிக்கைகளின்படி, இந்த 8 மாதகாலப்  போரில் அமெரிக்காவுக்கு 47 பில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.3.95 லட்சம் கோடி) அதிகமாகச் செலவாகியுள்ளது. போரால் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு மற்றும் பணவீக்கத்தால் அமெரிக்க மக்களுக்கு சந்தித்த கூடுதல் பெட்ரோல், டீசல் செலவு மட்டும் 40 பில்லியன் டாலர் எனவும், ஒட்டுமொத்த அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு 132 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாகவும் மூடீஸ் (Moody's) நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

மேலும், 1,000-க்கும் அதிகமான டோமாஹாக் ஏவுகணைகள், 250 தாட், பேட்ரியாட், 1,100-க்கும் அதிகமான ஜாஸ்ம் மற்றும் பிரசிஷன் ஸ்ட்ரைக் ஏவுகணைகளை அமெரிக்கா இந்தப் போரில் பயன்படுத்தி தீர்த்துள்ளது. இந்த ஆயுதக் கையிருப்பை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர 2030-ஆம் ஆண்டு வரை அந்த நாடு காத்திருக்க வேண்டும். 

இதுதவிர, 25 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். வளைகுடா நாடுகளில் சேதமடைந்த 217 அமெரிக்க ராணுவக் கட்டிடங்களைச் சீரமைக்க 10 பில்லியன் டாலரும், போரினால் இழந்த 105 விமானங்கள், டிரோன்கள் மற்றும் ரேடார் அமைப்புகளின் மதிப்பு 6 பில்லியன் டாலர் என பென்டகன் கணக்கிட்டுள்ளது.

 

அதிபர் ட்ரம்ப்பின் அதிரடி பேச்சு: 

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 8-ஆம் தேதி சிபிஎஸ் (CBS) தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “நாம் (அமெரிக்கா) பாதுகாத்த நாடுகள், இந்தப் போருக்காக நமக்கு ஏற்பட்ட அனைத்துச் செலவுகளையும் திருப்பித் தரப் போகின்றன. அந்தப் பணத்தை அமெரிக்கா 100 சதவீதம் திரும்பப் பெறும். நாம் இல்லையென்றால் அந்த நாடுகள் இன்று இருந்திருக்காது” எனத் தெரிவித்தார்.

குறிப்பாக இஸ்ரேலைச் சுட்டிக்காட்டி, “அமெரிக்காவும், இந்த ட்ரம்ப்பும் இல்லையென்றால் இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது. எங்கள் பி-2 குண்டுவீச்சு விமானங்கள் மூலம் ஈரானின் மூன்று அணுசக்தி மையங்களை அழித்தோம்; இல்லாமல் போனால் இன்று இஸ்ரேல் அழிந்திருக்கும்” எனப் பகிரங்கமாகப் பேசினார்.

இழப்பீடு கோர காரணம்:

இஸ்ரேலுக்காகவே அமெரிக்கா இந்தப் போரில் ஈடுபட்டு, தனது ஆயுதக் கிடங்கைக் காலி செய்ததாக ட்ரம்ப் கருதுகிறார். மேலும், போருக்குள் இஸ்ரேல் தன்னை  இழுத்துவிட்டதாக அவர் அதிருப்தியில் உள்ளார். அதேபோல், ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்க ராணுவம் பாதுகாப்பு அளிப்பதால், அதன் பலனை அனுபவிக்கும் வளைகுடா நாடுகள் அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் ட்ரம்ப் கூறுகிறார்.

இவற்றைவிட சமீபத்தில் நடந்த  அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி படுதோல்வியடைந்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததுதான் முக்கியமான காரணமாகும். பெட்ரோல் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் இஸ்ரேலுக்காக அமெரிக்கா பணத்தை செலவு செய்தது என்கிற வாக்காளர்களின் கோபமே இந்தத் தோல்விக்குக் காரணம் என ட்ரம்பும், துணை அதிபர் ஜே.டி.வான்ஸும் ஒப்புக்கொண்டுள்ளனர்.