முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், வித்தியாபுரம் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பத்து வீட்டுத்திட்டம் கிராமத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.

அப்பகுதி மக்களின் அழைப்பை ஏற்று குறித்த பகுதிக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், அப்பகுதி மக்களின் குறைபாடுகளைக் கேட்டறிந்ததுடன், மக்களின் குறைபாடுகளையும் நேரிலும் பார்வையிட்டார்.

அத்தோடு, வித்தியாபுரம், பத்துவீட்டுத்திட்டம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கும் இதன்போது நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், அங்கு வழிபாடுகளிலும் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களின் குறைபாடுகள்தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

அந்தவகையில், குறித்த பத்துவீட்டுத்திட்டம் கிராமத்தில் மின்சாரம் இன்மையால் தாம் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடுசெய்யப்பட்டது.

இவ்வாறு கிராமத்தில் மின்சாரம் இன்மையால் அங்குள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், அக்கிராமமானது காட்டுயானைகளால் பெரிதும் பாதிப்பை எதிர்கொள்ளும் பகுதியெனவும் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே பத்துவீட்டுத்திட்டம் கிராமத்திற்கு மின்னிணைப்பு  அத்தியாவசியமானது என மக்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

அத்தோடு, குடிநீரைப் பெற்றுக்கொள்வதிலும் தாம் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாகவும் அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடுசெய்யப்பட்டதுடன், குடிநீரைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கோரிக்கையும்விடுக்கப்பட்டது.

அதேவேளை, அப்பகுதியிலுள்ள மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்பு ஒழுங்குகளை மேற்கொள்ளுதல் தொடர்பிலும் மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், கடந்தகாலத்தில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்படாமலுள்ளமை தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இதுதவிர அப்பகுதியில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு சுற்றுவேலி அமைப்பது தொடர்பிலும் இதன்போது மக்களால் கோரிக்கையொன்றும் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், மக்களின் குறைபாடுகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், எழுத்துமூலமான கோரிக்கைகளைத் தம்மிடம் கையளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கமைய மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள், குறைபாடுகள் தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது இந்த மக்கள் குறைகேள் சந்திப்பில் புதுக்குடியிருப்பு பிரதேசசபைுஉறுப்பினர் ஜீ.ராதிகா கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.