அரசியல் அனுபவமே இல்லாத ஒருவர், பிரான்ஸ் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
பிரான்ஸ் நாட்டவரான டெடி ரைனர் (Teddy Riner, 37), ஒரு ஜூடோ விளையாட்டு வீரர் ஆவார்.
ஒலிம்பிக் போட்டிகளில் ஜூடோ விளையாட்டில் ஐந்து தங்கப் பதக்கங்கள், இரண்டு வெண்கலப் பதக்கங்கள், 11 முறை உலக சேம்பியன் என ரைனரின் வெற்றிகளைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.
இந்நிலையில், திடீரென தான் பிரான்ஸ் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார் ரைனர்.
நாட்டில், இடதுசாரி, வலதுசாரி என தீவிர அரசியல் சித்தாந்தங்கள் அதிகரித்துவரும் நிலையில், தான் எந்தப்பக்கமும் இல்லாமல், பிரெஞ்சு மக்களை ஒன்றிணைக்கும் நோக்கில் பிரச்சாரத்தை முன்வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் ரைனர்.
ரைனருக்கு அரசியல் அனுபவமே கிடையாது. ஆனால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்தான் தான் அரசியலில் நுழைவதற்கான உத்வேகத்தை தனக்கு அளித்ததாக தெரிவிக்கிறார் அவர்.

’ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின்போது மொத்த நாடும் ஒன்றாக, மகிழ்ச்சியாக, பெருமையாக ஒன்று கூடுவதை நான் பார்க்கிறேன், விளையாட்டுக்காக 15 நாட்களுக்கு நம்மால் ஒன்றிணைய முடியுமானால், அதை நாம் நாட்டுக்காகவும் செய்ய முடியவேண்டும் என்று எண்ணினேன்' என்கிறார் ரைனர்.