இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் விவசாய அமைச்சர் லால் காந்த மற்றும் அவரது குழுவினர் நாட்டின் விவசாயிகளையும், விவசாயத்துறையையும் மிகவும் மோசமான முறையில் விமர்சித்து வருவதாக தேசிய விவசாய ஒன்றியத்தின் தலைவர் அநுராத தென்னகோன் தெரிவித்துள்ளார்.

தேசிய விவசாய ஒன்றிய காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் வரலாற்றில் எந்தவொரு விவசாய அமைச்சரோ அல்லது வர்த்தக அமைச்சரோ விவசாயத் துறையையும், விவசாய மக்களையும் இந்த அளவுக்குத் தரம் தாழ்த்திப் பேசியதில்லை.

தற்போதைய விவசாய அமைச்சர் லால் காந்த, பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகிய மூவரும் விவசாயிகளுக்கு எதிராக மிகவும் மோசமான, வெறுப்புணர்வைத் தூண்டும் மொழியையே பயன்படுத்தி வருகிறார்கள்.

தமது நெல் விளைச்சலுக்கு நியாயமான விலையைக் கோரி ஜனநாயக முறையில் போராடும் விவசாயிகளை போலி விவசாயிகள் என்று கூறி அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் கருத்துக்களை வெளியிட்டு வருகிறது. அத்துடன், விவசாயத் துறை என்பது விவசாயிகளின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல, மாறாக இந்த நாட்டில் சோறு சாப்பிடும் ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினை என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சுமார் 18 இலட்சம் விவசாயக் குடும்பங்களின் வாக்குகளினாலேயே தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் விவசாயிகளுடன் இணைந்து போராடிய லால் காந்த போன்றவர்கள், இன்று அதிகாரத்திற்கு வந்தவுடன் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் மிரட்டல் தொனியில் நடந்துகொள்வது அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலையே காட்டுகிறது.

மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினர் தவறான தரவுகளைக் கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். கடந்த ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்திலேயே உர மானியம் 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போதைய அரசாங்கம் தவறான புள்ளிவிபரங்களைக் கூறி விவசாயிகளை ஏமாற்ற முற்படுகிறது.

விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் கணக்கிடும் போது அரசாங்க அதிகாரிகளின் சம்பளத்தை அதில் சேர்க்கக் கூடாது, நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் சோறூட்டும் விவசாயிகளுக்கு நீர் மற்றும் இதர வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும் என்றார்.

எனவே, விவசாயிகளைத் தொடர்ந்தும் அவமதித்து வரும் விவசாய அமைச்சர் லால் காந்த, பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மற்றும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகிய மூவரையும் உடனடியாகக் பொருத்தமான முறையில் அறிவுறுத்துங்கள் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுவதுடன், விவசாய அமைச்சர் லால் காந்த பதவியிலிருந்து விலகும் வரை அல்லது ஜனாதிபதி அவரை பதவியிலிருந்து நீக்கும் வரை நாடு தழுவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். இப்போராட்டத்திற்கு நாட்டின் ஒட்டுமொத்த நெல், கிழங்கு, வெங்காயம் மற்றும் மரக்கறி விவசாயிகள் என அனைவரும் கட்சி, இன, மதப் பேதங்களை கடந்து ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
Politics