உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் தனித்துவமான பண்பாட்டுப் பெருவிழாவாகவும், உழவர் திருநாளாகவும் போற்றப்படும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, வடக்கு மாகாண மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
பொங்கலை முன்னிட்டு அவர் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பயிரினங்கள் செழித்து வளர்வதற்குப் பெருத்துணை நின்ற சூரிய பகவானுக்கும், சேற்றில் கால் பதித்துச் சோற்றுப் பயிர் விளைவிக்கும் எமது உழவர் பெருமக்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக நின்ற கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் ஒரு உன்னதமான நாளாகவே இந்தத் திருநாள் அமைகின்றது.
இயற்கையோடு இயைந்த வாழ்வியலைக் கொண்ட எமது மக்களின் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் ஒரு மிகச் சிறந்த அடையாளமே இந்தப் பொங்கல் திருநாளாகும்.
எமது வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், விவசாயமே எமது பொருளாதாரத்தின் மிக முக்கிய அடிநாதமாகத் திகழ்கின்றது. எமது மண்ணும், மக்களும் விவசாயத்துடன் பிரிக்க முடியாத பந்தத்தைக் கொண்டவர்கள். அந்த வகையில், இப்பண்டிகையானது எமது மாகாணத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பண்டிகையாகும்.
கடந்த நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட 'டித்வா' சூறாவளிப் பேரழிவின் வடுக்களிலிருந்து எமது மக்கள் படிப்படியாக மீண்டெழுந்து வரும் ஒரு காலகட்டத்தில் இம்முறை நாம் தைப்பொங்கலைக் கொண்டாடுகின்றோம். இயற்கையின் சீற்றத்தால் நாம் பாதிக்கப்பட்டிருந்தாலும், எமது மக்களின் மனங்களில் உள்ள நம்பிக்கையும், விடாமுயற்சியும் ஒருபோதும் குறையவில்லை.
புதிதாகப் பிறக்கின்ற இந்தத் தை மாதம், தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாக மட்டுமன்றி, எமது மக்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்களை நீக்கி, புதிய வழிகளைத் திறக்கும் ஒரு மாதமாகவும் அமைய வேண்டும். 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது ஆன்றோர் வாக்கு. அதற்கமைய, சோதனைகளைக் கடந்து எமது விவசாயம் செழிப்பதற்கும், எமது மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கும் இத்திருநாள் வழிவகுக்கட்டும்.
புதிய அரிசியிட்டு, பால் பொங்கி, மகிழ்ச்சி பெருக்கெடுப்பதைப் போல, வடக்கு மாகாண மக்கள் அனைவரது வாழ்விலும் வளமும், நலமும், மகிழ்ச்சியும் பொங்கிப் பெருக வேண்டும் எனப் பிரார்த்தித்து, மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது தைப்பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என அந்த வாழ்த்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாய செழிப்பும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றமும் வேண்டி பிரார்த்தனை செய்வோம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space