நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவும், சித்திரவதைகள் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காகவும் திங்கட்கிழமை (15) நாட்டை வந்தடைந்த சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழுவின் பிரதிநிதிகள், செவ்வாய்க்கிழமை (16) அல்லது புதன்கிழமை (17) வெலிக்கடை சிறைச்சாலைக்கு களவிஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்லது சுதந்திரம் பறிக்கப்படக்கூடிய பிற இடங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குரிய நடைமுறைகள் அதிகாரிகளினால் பின்பற்றப்படுகின்றதா என்பதை மதிப்பீடு செய்வதற்காக சுமார் 7 ஆண்டுகளின் பின்னர் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்த சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழுவின் தலைவர் ஆயிஷா ஷுஜுனே முகம்மது தலைமையிலான ஜாகுப் ஜுலியன் செபெக், நிக்கா க்வாராட்ஸ்கெலிகா, அனிகா டோம்சிக் ஆகியோரடங்கிய பிரதிநிதிகள் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பர்.
'நாம் இலங்கைக்கு 2019 ஆம் ஆண்டு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் அரசாங்கம் சித்திரவதைகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்காக தேசிய தடுப்புப் பொறிமுறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது சித்திரவதைகளைத் தடுப்பதை இலக்காகக்கொண்ட பயணத்தில் முக்கிய நகர்வாகும்' எனச் சுட்டிக்காட்டியுள்ள சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழுவின் தலைவர் ஆயிஷா ஷுஜுனே முகம்மது, 'எமது தற்போதைய விஜயமானது சித்திரவதைத் தடுப்புப் பொறிமுறையின் செயற்திறனை மதிப்பிடுவதையும், கடந்த காலங்களில் எமது பரிந்துரைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள என்பது பற்றி ஆராய்வதையும் பிரதான நோக்கங்களாகக் கொண்டிருக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை 'சித்திரவதைகளைத் தடுப்பதற்கான எமது கூட்டு முயற்சிகளின் ஓரங்கமாக, இலங்கை அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் தேசிய தடுப்புப் பொறிமுறையுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், கூட்டாகக் களவிஜயங்களை மேற்கொள்வதற்கும் திட்டமிட்டுள்ளோம்' என்றும் ஆயிஷா முகம்மது குறிப்பிட்டுள்ளார்.
சித்திரவதைக்கு எதிரான பிரகடனத்தின் தெரிவுசெய்யப்பட்ட நெறிமுறையை 2017 ஆம் ஆண்டு இலங்கை ஏற்றுக்கொண்டது. அதன்பிரகாரம் இந்நெறிமுறையை ஏற்றுக்கொண்ட உறுப்புநாடுகளுக்கு முன்னறிவிப்புடனும், மக்களின் சுதந்திரம் முடக்கப்பட்ட அல்லது முடக்கப்படக்கூடிய இடங்களுக்கு முன்னறிவிப்பின்றியும் சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழுவின் பிரதிநிதிகள் விஜயம் மேற்கொள்ளமுடியும்.
அதற்கமைய நாட்டை வந்தடைந்திருக்கும் இக்குழுவின் பிரதிநிதிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, தேசிய சித்திரவதைத் தடுப்புப் பொறிமுறை உள்ளிட்ட கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளுடனும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனும் பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளனர்.
அதுமாத்திரமன்றி சிறைச்சாலைகள், தடுப்புக்காவல் நிலையங்கள் உள்ளடங்கலாக சித்திரவதைகள் இடம்பெறக்கூடும் என சந்தேகிக்கப்படும் இடங்களுக்குக் களவிஜயங்களையும் அவர்கள் மேற்கொள்ளவுள்ளனர். அதன் ஓரங்கமாக இன்று அல்லது நாளைய தினம் அப்பிரதிநிதிகள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு களவிஜயம் மேற்கொள்ளவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.