வ.உ.சி. நினைவு தினத்தில் முதல்வர் விஜய் நேரில் மரியாதை செலுத்த வேண்டும் என வ.உ.சி. சங்கங்கள் சார்பில் லைஃப்லைன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் குழுமத் தலைவர் டாக்டர் ஜே.எஸ்.ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது: நாட்டின் சுதந்திரத்துக்காக தனது உடல், பொருள், ஆவியை தியாகம் செய்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. ஏழை, எளிய மக்களுக்கு உதவியதுடன், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டார். ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ என்று இப்போது பேசுகிறோம்.
1905, 1906-ம் ஆண்டுகளிலேயே உள்நாட்டு உற்பத்தி மற்றும் தொழில் தொடங்குவதற்கான முன்னெடுப்புகளை அவர் மேற்கொண்டார். இருப்பினும், அவர் தமிழர் என்பதாலேயே பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை.
அனைவரும் வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறு, தியாகத்தை தெரிந்துகொள்ள வேண்டும். நவ.18-ம் தேதி அவரது நினைவு நாளில் அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவர் இழுத்த செக்கையும் பார்வையிட வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே வேண்டுகோள்.
கடந்த 2005-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, வ.உ.சி. நினைவு தினத்தில் நெல்லைக்கு வந்து, மணிமண்டபம் அமைத்துக் கொடுத்து மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு எந்த முதல்வரும் நேரில் வரவில்லை. எனவே, இந்த ஆண்டு நெல்லை, ஓட்டப்பிடாரம் அல்லது கிண்டியில் நடைபெறும் நினைவு தின நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்று வ.உ.சி.க்கு மரியாதை செலுத்த வேண்டும். வ.உ.சி. குறித்து நான் எழுதிய புத்தகத்தை அரசு நூலகங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும்.
வறுமையில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்க வேண்டும். தூத்துக்குடியில் வ.உ.சி. வாழ்ந்த இடத்தை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.