ஹட்டன் சிங்கிமலை வனப் பகுதியில் உள்ள ஒரு மலை உச்சியில் கீழே இறங்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு யுவதி ஒருவரை, ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு அதிகாரி, ஆய்வாளர் நிஷாந்த டி சில்வா உட்பட ஹட்டன் பொலிஸாரின் குற்றப்பிரிவு அதிகாரிகள் குழு ஒன்று வெற்றிகரமாக மீட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (6) இடம்பெற்றுள்ளது.
நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக மாணவி (வயது 20), அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிற மாணவர்களுடன் இலங்கைக்கு வருகைதந்து ருஹுனு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.
அவர் ஞாயிற்றுக்கிழமை (05) ஹட்டன், பொன்னகர் வீதியில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன அலுவலகத்தில் தனது சில நண்பர்களுடன் தங்கியிருந்து, ஒரு ஆராய்ச்சித் திட்டத்துக்காக சிங்கிமலை சிகரத்தை நோக்கி பயணித்துள்ளார்.
அந்த இளம்பெண் நேற்று காலை சிங்கிமலை சிகரத்தைப் பார்க்கச் செல்வதாகக் கூறிச் சென்றிருந்தபோது, அவர் திரும்பி வருவதற்கான வழியைக் கண்டறிய மலை உச்சிக்குச் சென்றிருக்கிறார். எனினும், அவரால் கீழே இறங்குவதற்கான வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் இது குறித்து ஹட்டனில் உள்ள அரசு சாரா நிறுவன அலுவலகத்தின் பொறுப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து, அவரைப் பொறுப்பேற்றிருந்த ஹட்டன் பகுதி அதிகாரி ஹட்டன் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஹட்டன் பொலிஸ் சிரேஷ்ட கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர மற்றும் ஹட்டன் தலைமையகத்தின் பிரதம ஆய்வாளர் டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாச ஆகியோரின் அறிவுறுத்தல்களின் பேரில், ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட ஒரு குழுவினர், சிங்கிமலை வனப்பகுதி வழியாக மலை உச்சிக்குச் சென்று யுவதி அமர்ந்திருந்த இருப்பிடத்தினை கண்டுபிடித்துள்ளனர்.
மலை உச்சியில் ஒரு பாறையின் மீது அமர்ந்திருந்த அந்த யுவதியை பாதுகாப்பாக மீட்டு, பொலிஸார் கொண்டுசென்ற உணவு மற்றும் பானத்தை, வனப்பகுதிக்குள் சிக்கித் தவித்த யுவதிக்கு கொடுத்து, மலை உச்சியில் இருந்து அழைத்து வந்து ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
காட்டுப் பகுதியிலிருந்து தன்னைக் காப்பாற்றியதற்காக ஹட்டன் பொலிஸாருக்கு நன்றி தெரிவித்த யுவதி, தான் தங்கியிருந்த சுற்றுலா விடுதிக்குத் தன் தோழிகளுடன் புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.