காவல் துறை காவலில் இருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள ஹோமாகம காவல் துறை நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி, மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் புதன்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே குறித்த அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த அதிகாரிக்கு மேலதிகமாக, ஹோமாகம காவல் துறை நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரினதும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரினதும் சேவைகளும் ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கிரிவத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த இஷார ஹர்ஷ குமார என்ற 29 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையாவார்.

காவல் துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.