தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ‘அக்வான்’ புயலாக நாளை வலுவடையுள்ளது. நவ.17-ம் தேதி தீவிர புயலாக மாறி ஆந்திர கடலோரப்பகுதியை நோக்கி நகரவுள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானியும், உயரதிகாரியுமான வி.ஆர். துரை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சனிக்கிழமை (நவ.14) நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஞாயிற்றுக்கிழமை (நவ.15) காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

இது, தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டது. இது மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடையவுள்ளது. இப்புயலுக்கு ஈரான் நாடு பரிந்துரைத்த ‘அக்வான்’ என்ற பெயரிடப்படவுள்ளது. இப்புயல் தெற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் திங்கள்கிழமை (நவ.16)  நிலவுக்கூடும். இது மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் நவ.17-ல்  தீவிர புயலாக நிலவுக்கூடும். இது அடுத்த 2 நாட்களில் மேலும் வலுப்பெற்று  வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திரா கடலோரப் பகுதியை நோக்கி நகரக்கூடும்.

தென்கிழக்கு- தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்திலிருந்து மாலத்தீவின் வடக்குப் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதுதவிர, கேரளக் கடலோரப்பகுதிகளுக்கு  அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன்காரணமாக, வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (நவ.15,16) மிதமான மழை பெய்யக்கூடும்.  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.