தேசிய வீடமைப்பு அதிகாரசபையால் முன்னெடுக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் நேரடி நிதி உதவி திட்டத்தின் கீழ், 13 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 1500 பயனாளிகளுக்கு வீடமைப்பதற்கான காசோலைகள் நாளை புதன்கிழமை வழங்கி வைக்கப்படவுள்ளன. அதற்கமைய ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 இலட்சம் ரூபா நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்த வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் திங்கட்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய வீடமைப்பு வேலைத்திட்டம் - 2026இன் கீழ் 6 அமைச்சுக்களால் வீடமைப்பு திட்டங்கள் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு இதில் பிரதான பங்கினை வகிக்கின்றது. இவ்வமைச்சின் கீழ் இரு வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தேசிய வீடமைப்பு அதிகாரசபை மற்றும் மீள் குடியேற்றல் பிரிவு ஆகியவற்றின் கீழ் குறித்த இரு வீடமைப்பு திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

மீள் குடியேற்றல் பிரிவின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள 8 மாவட்டங்களில் யுத்தத்தால் வீடுகளை இழந்தவர்களுக்காக குறித்த வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தேசிய வீடமைப்பு வேலைத்திட்டம் - 2026இன் கீழ் இவ்வாண்டுக்குள் 31 000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் 25 000 வீடுகள் அரசாங்கத்தின் நேரடி நிதி நிவாரணத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளன. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை இலக்காகக் கொண்டு இந்த வீடமைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஜனவரி 16ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் யாழ்ப்பாணத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 28ஆம் திகதி காலியில் பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் அடுத்த கட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த வகையில் நாளை புதன்கிழமை மாவட்ட ரீதியில் இந்த வீடமைப்பு திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. தேசிய வீடமைப்பு அதிகாரசபை ஊடாக 10 000 குடும்பங்களுக்கு வீடமைப்பிற்கான நிதி உதவி அரசாங்கத்தால் நேரடியாக வழங்கப்படுகிறது. அதாவது ஒரு குடும்பத்துக்கு 10 இலட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்படுகிறது.

களுத்துறை, கண்டி, மாத்தளை, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, அம்பாறை, குருணாகல், புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை, இரத்தினபுரி, மொனராகலை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் நாளை இந்த வீட்டுத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. இம்மாவட்டங்களில் 1500 பயனாளிகளுக்கு 1500 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கப்படவுள்ளன. தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தொழிநுட்ப வல்லுனர்களால் அதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.

550 சதுர அடியில் இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு வழிகாட்டல் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் வீட்டு நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும். நவம்பரில்