மஹர சிறைச்சாலையில் சனிக்கிழமை (1) பிற்பகல் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை 12 மணித்தியால கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை (2) காலை 6.00 மணியளவில் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவரப்பட்டுள்ளது.சிறைச்சாலை வைத்தியசாலை, சிறைச்சாலை வைத்தியசாலை, கைதிகளை பதிவு செய்யும் அலுவலகம், ஜெயிலர் அலுவலகம் முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்ற நிலைமை காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஆறு கைதிகள் காயமடைந்தனர். பதற்றமான சூழ்நிலைக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், கைதிகள் சிறைச்சாலையின் பல சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
சம்பவ தினத்தன்று (1) கைதிகளைப் பார்ப்பதற்காக அவர்களின் உறவினர்கள் வந்திருந்த வேளையில், பிறிதொரு கைதிகள் குழுவினர் சிறைச்சாலையிலிருந்து வெளியே கற்களையும் தடிகளையும் வீசியபோதே இந்த அமளி ஏற்பட்டது. மஹர சிறைச்சாலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தற்காலிக மதிலை உடைத்து, கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முயன்றனர்.
மேலும் ஒருசில கைதிகள் குழுவினர் சிறைச்சாலை கட்டடமொன்றுக்கு தீ வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலில் நின்றிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, கலவரத்தை ஏற்படுத்திய கைதிகள், தமக்கு ஒத்துழைக்காத ஏனைய கைதிகள் மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்தியுள்ளனர். அங்கு காயமடைந்த 6 கைதிகள் சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், அவர்களில் ஒரு கைதி பின்னர் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் வத்தளை, ஹந்தல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபராவார். மோட்டார் சைக்கிள் ஒன்றைத் திருடியமை மற்றும் 20 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளை வைத்திருந்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர் இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலை குறித்து அறிந்த கைதிகளின் உறவினர்கள், நேற்று முன்தினம் மாலை சிறைச்சாலைக்கு முன்பாகக் கூடி சிறைச்சாலை உத்தியோகத்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து சிறைச்சாலை மற்றும் அப்பகுதியின் பாதுகாப்புக்காக பொலிஸார், கலகம் அடக்கும் பிரிவினர், இராணுவ மற்றும் கடற்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புக்காக அங்கு வரவழைக்கப்பட்டனர். இருப்பினும், துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தை ஒத்த சத்தம் சிறைச்சாலை வளாகத்தினுள் கேட்டதையடுத்து ஆத்திரமடைந்த கைதிகளின் உறவினர்கள், வீதித் தடைகளை உடைத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல முயன்றனர். ஆனால் அந்த முயற்சியைப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முறியடித்ததுடன், பின்னர் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலையை நோக்கி கற்களினாலும் தாக்குதல் நடத்தினர்.
இதற்கிடையில் சிறைச்சாலையினுள் உள்ள நிலைமையை வான்வழியாகக் கண்காணிப்பதற்காக ட்ரோன் விமானம் ஒன்றையும், பெல் 412 ரக ஹெலிகொப்டர் ஒன்றையும் ஈடுபடுத்த விமானப்படை நடவடிக்கை எடுத்தது. பின்னர் பொலிஸ் அதிகாரி ஒருவர் வந்து கைதிகளின் உறவினர்களுக்கு நிலைமையை தெளிவுபடுத்திய பின்னர், அப் பிரிவினரை சிறைச்சாலையின் முன்பக்கத்திலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்திலும் அங்கு ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைவாக விரைந்து வந்தனர். மேல்மாகாணத்துக்கு பொறுப்பாக உயர் பொலிஸ் அதிகாரிகள் மஹர சிறைச்சாலைக்குள் பிரவேசித்து நிலைமை ஆராய்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தினர்.
எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்தப் பிரிவினர் அருகிலுள்ள வீதியொன்றிற்கு திருப்பி விடப்பட்டதுடன், அப்பகுதியின் அமைதியைப் பேணும் நோக்கில் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள 03 கிராம சேவகர் பிரிவுகளுக்கு நேற்று இரவு முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தல்
ஞாயிற்றுக்கிழமை காலை நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து மூன்று கிராம சேவகர் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டது.இருப்பினும் அப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டை விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததது.
20 கைதிகள் பூஸா சிறைக்கு மாற்றம்
மஹர சிறைச்சாலை மோதலுக்கு காரணமாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 20 கைதிகள் நேற்றைய தினம் பூஸா சிறைக்கு மாற்றப்பட்டார்கள். அத்துடன் ஏனைய கைதிகள் குறித்து சிறைச்சாலைத் திணைக்களம் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
சிறைச்சாலை சொத்துகளுக்கு பலத்த சேதம்
கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலினால் மஹர சிறைச்சாலையின் சொத்துகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சிறைச்சாலையின் வைத்தியசாலை, புனர்வாழ்வு மத்திய நிலையம், பிரதான ஜெயிலர் அலுவலம் மற்றும் சிறைச்சாலையின் ஓய்வு அறைகள் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல் கைதிகள் பதிவு கட்டடம் சேதப்படுத்தப்பட்டு, ஆவணங்கள் மற்றும் கோப்புக்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
விசாரணைகள் தீவிரம்
மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பில் விரைவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதியமைச்சு சிறைச்சாலை தலைமையகத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் பாதுகாப்பை பலப்படுத்த எந்நேரமும் உரிய தீர்மானங்களை எடுக்குமாறும், அதற்குரிய முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.