வைத்தியர்களுக்கான இடமாற்ற நடைமுறையில் சுகாதார அமைச்சரின் தன்னிச்சையான தீர்மானங்கள் மற்றும் அரசியல் தலையீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வியாழக்கிழமை (2) காலை 8.00 மணி முதல் வெள்ளிக்கிழமை (3) காலை 8.00 மணி வரை நாடளாவிய ரீதியில்  இரண்டாவது நாளாக அரச வைத்தியர்கள் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஏற்கனவே வைத்திய இடமாற்ற விடயத்தில் நிர்வாக சீர்கேடினை எதிர்த்து கடந்த மாதம் 31 ஆம் திகதியன்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை பிரதிநிதிதுவப்படுத்தும்  சுமார் 23 ஆயிரத்துக்கும் அதிக எண்ணிக்கையிலான வைத்தியர்கள் 24 மணித்தியாள  அடையாள பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை அடுத்து சுகாதார அமைச்சு இவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கது, வைத்தியர்களுக்கு சவால் விடுத்திருந்த நிலையில் புதன்கிழமை (1) கூடிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு எடுத்த ஏகோபித்த தீர்மானத்திற்கமைய  நேற்றைய தினமும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.  இதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் உள்ள அரச வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவு  மற்றும் மாதாந்த சிகிச்சைப் பிரிவுகளின் சேவைகள் ஸ்தம்பித்திருந்தன. அத்தோடு பணிபகிஷ்கரிப்பை அறியாது நேற்றைய தினம் அரச வைத்தியசாலைகளுக்கு வருகை தந்திருந்த  பெருமளவான நோயாளர்களும் பொதுமக்களும், சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்ததை காணக் கூடியதாக இருந்தது.

முறையான இடமாற்றச் சபையின் அனுமதியோ அல்லது அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரமோ இன்றி, 2026 ஆம் ஆண்டுக்கான பயிற்சி நியமனங்கள் மற்றும் பின்தங்கிய பிரதேச இடமாற்றப் பட்டியலை அமைச்சு தன்னிச்சையாக வெளியிட்டுள்ளதுடன், எவ்வித அடிப்படையுமின்றி 393 ஆக இருந்த பின்தங்கிய பிரதேச சேவை நிலையங்களை 265 ஆகக் குறைத்தமை மற்றும் ஒரு வருட சேவைக்காலத்தைத் தன்னிச்சையாக இரண்டு வருடங்களாக நீடித்தமை  உள்ளிட்ட தீர்மானங்களுக்கு எதிர்பினை தெரிவித்து  வைத்தியர்கள்  தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அத்தோடு உரிய அனுமதியின்றி 'ஆரோக்யா' எனும் அரசியல் திட்டத்திற்காக வைத்தியர்களை இணைத்துக்கொண்டமையால், வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு நிலவி வரும் கிராமப்புற வைத்தியசாலைகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. இந்த தொழிற்சங்க போராட்டத்தில் நோயாளிகளின் நலன் கருதி மகப்பேறு, சிறுவர், புற்றுநோய் மற்றும் சிறுநீரக சிகிச்சை அலகுகள் உள்ளிட்ட அவசர சிகிச்சைச் சேவைகள் எவ்விதத் தடையுமின்றி வழமைபோல் இயங்குவதாக அவை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் வைத்தியர்கள் முன்னெடுத்திருந்த  வேலை நிறுத்தம் காரணமாக அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மாதாந்த சிகிச்சைக்காக வருகை தந்திருந்த நோயாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததுடன், தமது விசனத்தையும் வெளியிட்டிருந்தனர். குறிப்பாக வியாழக்கிழமை (2) பெருமளவான நோயளர் வைத்தியசாலைகளுக்கு வருகைத் தந்திருந்ததுடன், சிக்சைகளை பெற முடியாமல் வேதனையுற்றிருந்தனர்.

இது என்ன பிரச்சினை என்று எங்களுக்குத் தெரியாது. எங்களால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நோயாளிகள் பாவம் இல்லையா? அதிகாலை 4.30 அல்லது 5. 00 மணிக்கே வந்தோம். மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் இன்று வந்தோம். ஏழை மனிதர்களுக்குத்தான் எல்லா கஷ்டங்களும். இன்று வேலைநிறுத்தம் என்று எங்களுக்குத் தெரியாது. மருந்துகளைப் பெறாது வீடுகளுத்திரும்ப வேண்டியுள்ளது. வைத்தியர்கள் தாம் செய்வது சரியா என்று மனசாட்சியுடன் யோசிக்க வேண்டும். மக்களின் பணத்தில் படித்து, அரசாங்கத்தின் பரீட்சைகளில் சித்தியடைந்து, சம்பள உயர்வையும் பெற்றுக்கொண்டு இறுதியில் வேலைநிறுத்திலும் ஈடுபடுகின்றனர்.

வைதியர்களின் இந்த நடவடிக்கையினால் ஏழை மக்களே இறுதியில் பாதிக்கப்படுகின்றனர் எனவும், இலவச சுகாதாரத்துறையை நம்பியுள்ள பொதுமக்களை இவ்வாறான நெருக்கடிக்குள் தள்ள வேண்டாம் எனவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மாதாந்த சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக வருகை தந்திருந்த நோயாளர்கள் பலரும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் சிகிச்சைகளைப் பெறாது வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய மக்கள், பிறிதொரு நாளில் சிகிச்சை பெறத் திகதி குறிப்பிடப்பட்டதாகத் தெரிவித்தனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட பெரிய வைத்தியசாலைகளுக்கு அதிக மக்கள் கூட்டம் வருகை தருவதனால்,  காலை 5.00 மணிக்கும்  முன்னதாகவே  சிகிச்சைக்காக நோயாளர்கள் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்றைய தினம் தூரப் பிரதேசங்களிலிருந்து வருகை தந்திருந்த மக்களும் நீண்ட நேரக் காத்திருப்பின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியிருந்தனர். மாதாந்த சிகிச்சைக்கு வருகை தரும் நோயாளர்களுக்கும் மருந்துகள் வழங்கப்படவில்லை என வருத்தம் தெரிவித்திருந்தனர்.