அரசலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு பாரிய அச்சுறுத்தலையும் நெருக்கடியையும் தோற்றுவித்துள்ளதால், அரசாங்கம் அதனை உடனடியாகக் கைவிட வேண்டும் என சர்வஜன அதிகாரம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கொழும்பிலுள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைமையகத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி ரஞ்சன் செனவிரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் கொண்டுவரும் சட்டத்திருத்தம் தர்க்கரீதியானதாகவும் கொள்கை ரீதியானதாகவும் இருக்க வேண்டும். பொதுமக்கள் நலனுக்காகவே இந்தத் திருத்தத்தைக் கொண்டுவருவதாக அரசாங்கம் கூறினாலும், அதனால் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதைத் தர்க்கரீதியாக விளக்குவதற்கு அரசாங்கம் தவறியுள்ளது.
உச்ச நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களுக்கு அதிகரிப்பதன் மூலம், ஊழல்வாதிகளுக்கு விரைவாக தண்டனை வழங்கவும் 15 முதல் 20 வருடங்களாகத் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவுபடுத்தவும் முடியும் என அரசாங்கம் கூறுகிறது. ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால் மாத்திரம் வழக்குத் தாமதங்களோ அல்லது ஊழல்வாதிகளுக்கான தண்டனைகளோ விரைவுபடுத்தப்பட மாட்டாது. பெரும்பாலான வழக்குகள் நீதவான் மற்றும் மேல் நீதிமன்றங்களிலேயே நிலுவையில் உள்ளன.
நீதித்துறையின் சுயாதீனத்துக்காகப் போராடிய உபுல் ஜயசூரிய, சாலிய பீரிஸ், ஜெஃப் அழகரத்னம், லால் விஜேநாயக்க போன்ற சிரேஷ்ட சட்டத்தரணிகளும் ஜனாதிபதி சட்டத்தரணிகளும் இந்தத் திருத்தத்துக்குத் தமது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். கடந்த காலத்தில் ஹர்ஷன நாணயக்கார மற்றும் சுனில் வட்டகல ஆகியோருடன் இணைந்து போராடிய முன்னணி நபர்கள் எவரும் இன்று அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு ஆதரவாக இல்லை.
அமைச்சராக இருக்கும் ஹர்ஷன நாநாயக்கார போன்றவர்களால் கூட தொலைக்காட்சிகளில் இதனைத் தர்க்கரீதியாக நியாயப்படுத்த முடியவில்லை. அரசாங்கத்தில் இருப்பதால் மட்டுமே அவர்கள் இதனை நியாயப்படுத்த முற்படுகின்றனர்.
குறிப்பிட்ட சில நீதிபதிகளுக்குச் சலுகை அளிக்கும் வகையில் இந்தத் திருத்தம் அமைந்துள்ளதாகப் பொதுமக்கள் மத்தியில் அபிப்பிராயம் உருவாகும் என்றும், அது நீதித்துறையின் சுயாதீனத்துக்குப் பெரும் பாதிப்பு என்றும் சர்வதேச நீதிபதிகள் சங்கமும் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய நீதிபதிகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு திருத்தத்துக்கும் அரசியலமைப்பின் 3ஆவது பிரிவின் கீழ் கட்டாயம் மக்கள் தீர்ப்பு (சர்ஜன வாக்கெடுப்பு) நடத்தப்பட வேண்டும்.
அரசாங்கத்துக்கு மக்கள் தீர்ப்புக்குச் செல்லாமல் இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டுமானால், இத்திருத்தமானது இனிவரும் காலத்தில் புதிதாக நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற சரத்தை உள்ளடக்குவதே ஒரே வழியாகும். அவ்வாறு செய்யாவிட்டால், கட்டாயம் மக்கள் தீர்ப்புக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதனால் நாட்டிற்குப் பல பில்லியன் ரூபாய் வீண் விரயமாவதுடன், அந்தப் பொருளாதாரச் சுமை பொதுமக்கள் மீதே சுமத்தப்படும்.
எனவே, நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிக்கும் இந்தத் திருத்தத்தைச் சட்டமாக்குவதை விடுத்து, மக்கள் தீர்ப்பைத் தவிர்க்கும் வகையில் புதிய நீதிபதிகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் சரத்தைச் சேர்க்க வேண்டும் அல்லது இந்த முயற்சியை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் என்றார்.
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை கைவிட வேண்டும்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space