அநுராதபுரம், மதவாச்சி பகுதியில் அடையாளம் தெரியாத நோயினால் 42 எருமைகள் உயிரிழந்தமைக்கான காரணம் 'கிளாஸ்ட்ரிடியம்' எனப்படும் பாக்டீரியா தொற்று என கால்நடை வைத்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த எருமைகளுக்கு அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்ட கால்நடைப் புலனாய்வு அதிகாரிகளால் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், மாதிரிகள் பேராதனை - கன்னொருவையிலுள்ள கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன் ஆய்வு முடிவுகளின்படியே கிளாஸ்ட்ரிடியம் பக்றீரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய் முதன்முதலில் கண்டறியப்பட்ட பண்ணையில் தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மதவாச்சி கால்நடை வைத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.
நோய் மேலும் பரவுவதைத் தடுக்க, அதிக ஆபத்துள்ள பகுதிகளிலுள்ள கால்நடைகள் மற்றும் எருமைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன; இதற்கான தடுப்பூசிகள் ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த நோய் ஒரு விலங்கிலிருந்து மற்றொரு விலங்கிற்கு நேரடியாகப் பரவாது எனவும், மாசுபட்ட புல் அல்லது நீரை உட்கொள்வதன் மூலமே தொற்று ஏற்படுகிறது எனவும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட எருமைகள் முன்னர் மேய்ந்த பகுதிகளுக்குத் தமது கால்நடைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் எனப் பண்ணையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நோய் பரவலினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கால்நடைப் போக்குவரத்து தற்போது மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாகக் கால்நடை வைத்திய அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.