பிரான்ஸ், ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் இந்தப் பயணத்தில் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஸ்லோவேக்கியா ஆகிய ஐரோப்பிய நாடுகளில் 6 நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். அவரது பிரான்ஸ் பயணம் 2 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் ஸ்லோவேக்கியாவில் பயணம் மேற்கொள்வார். பிரதமர் மோடி தனது முதல்கட்ட பிரான்ஸ் பயணத்தில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் நீஸ் நகரில் இன்று (ஜூன் 14) இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ஸ்லோவேக்கியாவில் பயணம்: இந்தியா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த முன்னணி ஸ்டார்ட்-அப்கள் மற்றும் வென்சர் கேபிடல் நிதியங்களை ஒன்றிணைக்கும் 'பாரத் இன்னோவேட்ஸ்' நிகழ்ச்சியை இரு தலைவர்களும் கூட்டாக தொடங்கி வைக்க உள்ளனர். பிரதமர் மோடி ஜூன் 14, 15-ல் ஸ்லோவேக்கியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அந்நாட்டுப் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மற்றும் அதிபர் பீட்டர் பெல்லக்ரினியைச் சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கிறார்.
மீண்டும் பிரான்ஸ் திரும்பும் மோடி, ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் எவியான் நகரில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். அங்கு அவர் ஜி7 நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட நட்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார்.
இந்த உச்சி மாநாட்டுக்கு இடையே, உலகத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையும் பிரதமர் மோடி மேற்கொள்வார். பயணத்தின் இறுதி நாளான ஜூன் 18-ம் தேதி பிரதமர் மோடி பாரிஸ் நகருக்கு சென்று அங்குள்ள இருதரப்பு நிகழ்ச்சிகளில்பங்கேற்பதுடன், ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்-அப் நிகழ்ச்சியான ‘விவாடெக்’ உச்சி மாநாட்டிலும் கலந்து கொள்கிறார். மேலும், பிரான்ஸ் தலைநகரில் வாழும் இந்திய வம்சாவளியினர் மத்தியிலும் உரையாற்றுவார்.
பிரதமர் அறிக்கை: பிரதமர் மோடி தனது இரு நாட்டுப்பயணத்தை நேற்று தொடங்குவதற்கு முன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜி7 அமைப்பில் இந்தியா பங்கேற்பது, நம் நாட்டின் மீது நமது கூட்டாளிகள் கொண்டுள்ள நம்பிக்கை, உலக அரங்கில் வளர்ந்து வரும் நமது முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.
ஜி7 மாநாட்டுக்கு இந்தியா அழைக்கப்படுவது இது 8-வது முறையாகும். ஜி7 மாநாட்டில், இந்தியா தனக்காக மட்டும் பேசாமல் குளோபல் சவுத் நாடுகளின் எதிர்பார்ப்புகளையும் உலகுக்கு எடுத்துரைக்கும். பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியா குடியரசுக்கான எனது பயணம், ஐரோப்பா மற்றும் ஜி7 நாடுகளுடன் இந்தியாவின் ஆழமான உறவை மேலும் வலுப்படுத்தும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மேலும் ஐரோப்பா கண்டத்துடனும் அதற்கு அப்பாலும் நமது கூட்டாண்மையை விரிவுபடுத்துவதில் நமக்குள்ள உறுதியான அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்தும்.
கடந்த 1993-ல் ஸ்லோவேக்கியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் அங்கு செல்வது இதுவே முதல் முறை என்பதால், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என நம்புகிறேன். பிராட்டிஸ்லாவா நகரில் ஸ்லோவேக்கியா அதிபர் பீட்டர் பெல்லக்ரினி, பிரதமர் ராபர்ட் ஃபிகோ ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், தொழில்துறை தலைவர்களுடனும் கலந்துரையாட உள்ளேன்.
ஜூன் 18-ல் பாரிஸில் அதிபர் மேக்ரானுடன் இணைந்து ‘விவாடெக் 2026’ நிகழ்வில் பங்கேற்கிறேன். பாரிஸில் வாழும் துடிப்புமிக்க இந்திய வம்சாவளியினரை சந்திக்கவும் நான் திட்டமிட்டுள்ளேன். இந்தியா - பிரான்ஸ் இடையே ஒரு வாழும் பாலமாக அவர்கள் விளங்கி வருகின்றனர். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.