அறவழியில் போராடி தன்னுயிரை தற்கொடையாக தந்த புனிதன் எங்களது அண்ணன் திலீபனுக்கே இந்த நிலை என்றால் ஈழத்திருநாட்டில் வாழும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கு தினம் தினம் என்ன அக்கிரமம் நடக்கும் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
இவ்வாறு தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனரும், திரைப்பட இயக்குனருமான வடமலை கௌதமன் தெரிவித்துள்ளார். நல்லூர் நினைவு முற்றத்தில் இருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலையானது யாழ்ப்பாண போலிசாரால் அகற்றப்பட்டமை குறித்து அவர் வெளியிட்ட கண்டன அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நிறைவேற்றப்படக்கூடிய, நிறைவேற்றப்பட வேண்டிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தியாக தீபம் அண்ணன் திலீபன் அவர்கள் நீராகாரம் கூட அருந்தாமல் தனது இன்னுயிரை மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தியாகம் செய்தார். இத்தகைய தியாகத்தை செய்வதற்கு இவ்வுலகில் எவர் முன்வருவர்?
அவரது தியாகத்தை கண்டு கூனி குறுகி நிற்க வேண்டிய சிங்கள பேரினவாதம், சற்றும்கூட கூச்சமோ, குற்ற உணர்ச்சியோ இல்லாமல் இன்று அவரது சிலையை உடைப்பதற்கு துணிந்துள்ளது. இந்த சம்பவத்தால் நீங்கள் வீரர்கள் ஆகிவிடுவீர்கள் என்று நினைக்கின்றீர்களா? ஒருபோதும் இல்லை. மீண்டும் மீண்டும் கோழைகள் என்பதை இவ்உலகத்துக்கு பறைசாற்றியிருக்கின்றீர்கள்.
உங்களது கட்சிக்கு நம்பி வாக்களித்த எங்கள் தமிழர்களுக்கு நீங்கள் செய்கின்ற நன்றிக்கடன் இதுதானா? குற்ற உணர்ச்சியால் உங்கள் மனசாட்சி சற்றும்கூட உறுத்தவில்லையா? தன்னுயிரை தியாகம் செய்த தியாகியின் சிலையை உடைத்து சென்ற தங்களுக்கு மனசாட்சி, குற்ற உணர்ச்சி இவையெல்லாம் இன்னும் இருக்கும் என எதிர்பார்ப்பது எங்கள் தவறுதான்.
இப்படியெல்லாம் செய்து இறுதியில் எதனை சாதிக்கப்போகின்றீர்கள்? உங்கள் இலட்சியம் என்னவாக இருக்கிறது? சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதா? அல்லது தமிழ் மக்களை மிரட்டுவதா? கல்லாலான ஒரு சிலையே உங்கள் அரசை இந்த அளவிற்கு நிலைகுலையச் செய்கின்றது என்றால் ஈழத் தமிழரின் வீரத்தை நிரூபிக்க நாங்கள் வேறு எந்த ஆயுதமும் இனி கையில் எடுக்க தேவையில்லை.
இதற்கு முன்பு ஆண்டவர்கள் எல்லாம் கொடூர முகத்தை காட்டி கோரத்தாண்டவம் ஆடினார்கள் நீங்களோ குழந்தை முகத்தை காட்டி குரூரத்தாண்டவம் ஆடுகிறீர்கள். பாவம் இது எதனையும் அறியாத எம் மக்கள் உங்களிடம் மீண்டும் மீண்டும் ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள்.
கடந்த காலங்களில் எங்களின் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்த நினைவுச் சின்னத்தை உடைத்தீர்கள். உலகம் முழுவதும் வாழும் எம் தமிழர்கள் பொங்கி எழுந்ததும் அந்த வெக்கை தாங்காமல் தாழ்பணிந்து நீங்களே மீண்டும் கட்டியெழுப்பினீர்கள். அறத்தோடு சொல்கிறேன். எங்களின் புனிதச் செல்வனின் சிலையை எந்த வாகனத்தில் பெயர்த்தெடுத்து சென்றீர்களோ அதே வாகனத்தில் மீண்டும் எடுத்து வந்து அதே இடத்தில் நிறுவுவதற்கு வழி செய்யுங்கள். அதனை செய்யத் தவறும் பட்சத்தில் ஒட்டுமொத்த உலகத் தமிழர்கள் முன்பும் நீங்கள் கூனிக் குறுகி நின்று, வெட்கப்பட நேரிடும். இது உங்களுக்கு மட்டுமல்ல, இறுதியில் உங்களது இனத்துக்கே அவமானத்தை கொண்டு வந்து சேர்க்கும் இது உறுதி.
இந்த சந்தர்ப்பத்தில் அடிவயிற்றின் பெருவலியோடு "மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்கிற எங்கள் திலீபன் அண்ணாவின் உணர்வுப் பெருக்கான வாசகத்தை மீண்டும் உலகத்தமிழர்கள் மத்தியில் நினைவுகூற விரும்புகிறேன் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.