மாண்புமிகு அமைச்சர் திரு.ஆ.ராஜ்மோகன் அவர்கள்,
பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை.

கீழடி என்கிற இடம் அறிவியல் ரீதியாகவும் கள ஆய்வுகளின் மூலமும் கண்டுபிடிக்கப்பட்ட தமிழர்களின் ஆகப் பெரும் வரலாற்றுத் தடம். தற்பொழுது கீழடி  தமிழர்களின் தாய்மடியாகவும் உலகில் தோன்றிய இனங்களில் தமிழினம்தான் முதன்மையானது என்றும் மாந்தர் குலத்தில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே நகர நாகரீகத்தோடு வாழ்ந்த மூத்த முன்னோடி இனம் என்றும் தொன்ம ஆவணங்களோடு பறைசாற்றி போற்றி கொண்டாடப்பட்டு வருகிறது.

2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களின் தலைமையில் இருந்த சிறு தொல்லியல் குழுவால் நடைபெற்ற வைகை நதிக்கரையை பற்றிய  கள ஆய்வின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது. இக்குழுவினர் ஓராண்டாக வைகை நதிப் பகுதிகளில் ஒரு நீண்ட அறிவியல் ரீதியிலான தொல்லியல் கள ஆய்வை மேற்கொண்டனர். அவ்வாறு அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 293 இடங்களில் பல வகையான தொல்லியல் எச்சங்களை கண்டறிந்து அதில் குறிப்பாக கீழடி என்ற இடத்தை தேர்வு செய்து அகழாய்வு செய்வதற்கு முடிவு செய்தனர். இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டில் பல இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டு இருந்தாலும் "மக்கள் வாழ்ந்த இடங்களைப்" பற்றி எந்த ஒரு ஆய்வும் இதுவரை சரியாக நடத்தப்படவில்லை.  இதன் காரணமாகவே தமிழர்கள் அரைப் பழங்குடி நாகரிகத்தை சார்ந்தவர்கள் என்றே பலரும் பல ஆண்டுகளாக சொல்லி வந்தனர். இந்த குறையைப் போக்க, வைகை நதிக்கரையில் மதுரைக்கு அருகில் "மக்கள் வாழ்ந்த இடமான" "கீழடி" என்ற இடத்தை தேர்வு செய்து 2015 மற்றும் 2016 ஆகிய இரு ஆண்டுகளில் மிகப்பெரிய அகழாய்வை செய்து தமிழ்நாட்டில் சங்க காலத்தில் நகர நாகரிகம் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்களை கீழடியில் கண்டுபிடித்தனர். அன்றிலிருந்து கீழடி உலக தமிழ் மக்களின் பேசு பொருளாக மாறியதோடு அல்லாமல் இன்று வரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அகழாய்வு செய்யப்பட்டுக்கொண்டு வருகிறது.  அத்தகைய சிறப்புமிக்க கீழடியை தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு தொடர்ந்து பாதுகாக்கவும் மேலும் பல ஆய்வுகளை செய்ய வேண்டியும் கீழ்கண்ட கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.


திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களின் குழு முதல் இரண்டு ஆண்டுகள் கீழடியை கண்டுபிடித்து அகழாய்வு செய்த ஆய்வு அறிக்கையினை மத்திய அரசிடம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒப்படைத்தார். இன்று வரை மத்திய அரசு இந்த ஆய்வு அறிக்கையை வெளியிடாமல் திட்டமிட்டு காலம் தாழ்த்தி வருகிறது. முடியுமானால் அந்த அறிக்கையினை மொத்தமாக குழி தோண்டி புதைக்கவும் பலவகைகளில் சூழ்ச்சி செய்கிறது. ஆகையினால் அறம் கொண்ட நிலையெடுத்து அவ்வறிக்கையினை இன்றைய தவெக அரசு அதிகப்படியான அழுத்தம் கொடுத்து உடனடியாக வெளியிட வைக்க வேண்டும். இந்த அறிக்கை வெளியே வந்தால் மட்டுமே தமிழ் நாட்டின் மிக முக்கியமாக தமிழினத்தின் உண்மை வரலாற்றை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாக அமையும். இந்த அறிக்கையின்  மூலம் மேலும் பல ஆக்கப்பூர்வமான ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.  
கடந்த  26.02.2024 அன்று திரு.பிரபாகரபாண்டியன் என்பவர் தொடுத்திருந்த பொதுநல வழக்கில்  மத்திய தொல்லியல் துறை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாங்கள் ஒன்பது மாதங்களுக்குள் ஐனவரி மாதம் 2023 ஆம் ஆண்டு திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் எழுதி சமர்ப்பித்த அறிக்கையினை வெளியிட்டு விடுவோம் என்று கொடுத்த உத்திரவாதம் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இந்திய ஒன்றிய பாஜக அரசு  நீதிமன்ற அவமதிப்பு செய்ததோடு  மட்டுமல்லாமல் வாக்குக் கொடுத்து இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போதைய மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஜெகாவத் அவர்கள் சமீபத்திய அறிக்கை ஒன்றில்  982 பக்கங்கள் கொண்ட திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களின் ஆய்வு அறிக்கையினை  கொச்சைப்படுத்தியுள்ளார். மனித குலத்தில் ஆரிய இனமே முதன்மை என்றும் சமஸ்கிருத வேதமே தலையாயது என்றும் நேர்மையற்று கட்டமைப்பதற்காக அவர்கள் திட்டமிட்டு உண்மையான தமிழரின் தொன்மையை மூடி மறைக்க பெரும்பாடுபட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆகையினால் கீழடி அறிக்கையினை  வெளியிட, மத்திய அரசினை பணிய வைக்க தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு ஆகப்பெரும் அழுத்தம் கொடுப்பதோடு மட்டும் இருந்துவிடாமல் அவர்கள் மென்மேலும் தாமதப்படுத்தினால் சட்டசபையில் ஒரு தீர்க்கமான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிட வைக்க வேண்டும்.    தமிழ்நாட்டில் பல ஆறுகள் ஓடுகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் காவேரி, பாலாறு, தென்பெண்ணை, தாமிரபரணி மற்றும் அதனுடைய துணை ஆறுகளில் கள ஆய்வுகள் மேற்கொண்டு மேலும் பல அகழாய்வுகளை செய்ய வேண்டும். இதன் மூலம் தமிழ் மக்களின் தொன்மை அறிவியல் ரீதியாக உலக மக்களுக்கு எடுத்து சொல்கின்ற வரலாற்று வாய்ப்பு  தவெக அரசுக்குக் கிடைக்கும். அதை உடனடியாக இப்போதுள்ள தவெக அரசு உறுதியாக செய்ய வேண்டும்.  
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை பொதுவாக ஐஏஎஸ் அதிகாரிகள்தான் நிர்வகித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் தமிழின் பெருமையையோ தமிழரின் வரலாற்று உண்மையையோ அறிந்திருப்பதில்லை. அறிந்திருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில்லை. கடந்த 30 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரிகளே இதன் தலைமை அதிகாரியாக இருந்து செயல்பட்டு வருகின்றனர். அந்த முறையை கட்டாயம் மாற்றி அமைக்க வேண்டும். இது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த துறையாகும். அத்தகைய தொல்லியல் துறைக்கு "தொல்லியல் அறிஞர்களே"  தலைவர்களாக இருந்து பணியாற்ற வேண்டும். அப்பொழுதுதான் பல ஆய்வுகளை தமிழ்நாட்டில் செய்வதற்கான வாய்ப்புகள் பிறக்கும். அதை தற்போது ஆட்சி பொறுப்பு ஏற்றுள்ள  தவெக அரசு அமைக்க வேண்டும்.  
கீழடி என்ற இடத்தை கண்டுபிடித்து சிறந்த முறையில் அகழாய்வு செய்து தமிழரின் தொன்மையை வெளிக்கொண்டு வந்த திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் மத்திய அரசின் பல தொந்தரவுகளுக்கு நடுவில் இன்று டெல்லிக்கு அருகில் உள்ள கிரேட்டர் நொய்டா என்ற இடத்தில் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். அவரையே தமிழ்நாடு அரசு தமிழகத் தொல்லியல் துறையின் இயக்குனராக நியமிக்க வேண்டும். அவரின் அயராத முயற்சியினால்தான் கீழடி போன்ற இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் உலக அரங்கில் தமிழர்களின் வரலாற்று உண்மை அனைவரும் அறியும் வகையில் தெரியவந்துள்ளது.

   6.கீழடி நகர நாகரிகத்தை அவ்வப்பொழுது ஆளுகின்ற அதிகார வர்க்கத்தினரில்  சிலர் பாரத நாகரிகம் என்றும் ஆரிய நாகரிகம் என்றும் சிலர் திராவிட நாகரிகம் என்றும் மடை மாற்றுவது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகையினால் கீழடி அருங்காட்சியத்திலும்  கீழடி தொன்மங்கள் கிடைக்கின்ற அனைத்து இடங்களிலும் "தமிழரின் தாய்மடி கீழடி" என்றும் "தமிழினத்தின் தொன்மை அடையாளம் கீழடி" என்றும் பொறித்த பெயர் பலகைகள் உடனடியாக நிறுவப்பட வேண்டும்.

இங்கு மேலே குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் தமிழ் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக அரசு உறுதியாக நிறைவேற்றும் என்கிற நம்பிக்கையோடு  தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் உலகத் தமிழர்களின் சார்பிலும்  வழங்குகிறேன்.

வ.கௌதமன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
"சோழன் குடில்".