ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்றைய தினம் (20) கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகராக கடமையாற்றிய காலத்தில், தனது ஊழியர்களுக்காக எனத் தெரிவித்து தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட 4 அரச ஊழியர்களில் மூவரை தனக்குச் சொந்தமான தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்தியதாகவும், மற்றைய ஊழியரை அவருக்குரிய அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்தாது வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் குறித்த ஊழியர்களுக்கு அரசாங்கத்தினால் 2,768,836.14 ரூபாய் சம்பளம் உள்ளிட்ட கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டு அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி வழக்கில் முதலாவது சந்தேக நபராக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பெயரிடப்பட்டுள்ளதோடு, குற்றச்செயலுக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாக குளியாப்பிட்டியவைச் சேர்ந்த தீபால் சஞ்சீவ ரத்னாயக்க என்ற முகாமைத்துவ உதவியாளரான எரிபொருள் நிரப்புநிலைய ஊழியர் 2ஆவது சந்தேக நபராகவும் பெயர் குறிப்பிடப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அகில விராஜ் காரியவசம் மற்றும் 2ஆவது சந்தேக நபர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். சந்தேக நபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காளிங்க இந்திரதிஸ்ஸ ஆஜராகியிருந்தார்.
இதன்போது மேலதிக அறிக்கையைச் சமர்ப்பித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.
மேலும், வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள சிலரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டியுள்ளதாகவும், கையெழுத்து தொடர்பான அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும் ஆணைக்குழு நீதிமன்றத்துக்கு அறிவித்தது.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதவான், இச்சம்பவம் தொடர்பான விசாரணை முன்னேற்ற அறிக்கையை ஜனவரி 5ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டு, வழக்கினை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தார்.