மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்துவரும் பின்னணியில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஏப்ரல் மாதத்துக்குரிய தரவுகளின் பிரகாரம், தனிநபர் ஒருவர் அவரது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு மாதமொன்றுக்கு ஆகக் குறைந்தது 17,117 ரூபா வருமானம் ஈட்டவேண்டும்.

இந்தப் பெறுமதி நிர்ணயமே வீட்டுப் பொருளாதார நிலைவரத்தை மதிப்பீடு செய்வதற்கான மிக முக்கிய குறிகாட்டிகளில் ஒன்றான 'தேசிய உத்தியோகபூர்வ வறுமைக்கோடு' ஆகும். இந்த உத்தியோகபூர்வ வறுமைக்கோடானது இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து படிப்படியாக உயர்வடைந்து வருகிறது. அதன்படி இந்தப் பெறுமதி ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் முறையே 16,730, 16,571, 16,690 மற்றும் 17,117 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன் அர்த்தம் நாடளாவிய ரீதியில் வறுமை மட்டம் படிப்படியாக உயர்வடைந்து வருகிறது என்பதாகும்.

அதேவேளை மாவட்ட ரீதியாக நோக்குகையில் ஒவ்வொரு மாவட்டத்தினதும் வாழ்க்கைச்செலவு மற்றும் முன்னேற்றத்தின் அடிப்படையில் இந்தப் பெறுமதி வேறுபடுகிறது. அதன்படி மிக உயர்வான வறுமைக்கோடான 18,461 ரூபா பதிவான மாவட்டமாக கொழும்பும், இரண்டாவதாக 18,367 ரூபா பெறுமதியுடன் கம்பஹாவும், மூன்றாவதாக 18,001 ரூபா பெறுமதியுடன் நுவரெலியாவும் காணப்படுகின்றன. அதேபோன்று மிகக்குறைந்த வறுமைக்கோடாக மொனராகலை மாவட்டத்தில் 16,367 ரூபாவும், கிளிநொச்சி மாவட்டத்தில் 16,537 ரூபாவும் பதிவாகியுள்ளன.

ஒரு தசாப்தத்துக்கு முன்னர் (2012 - 2013) 5,223 ரூபாவாகக் காணப்பட்ட இந்த தேசிய உத்தியோகபூர்வ வறுமைக்கோடு, தற்போது 17,117 ரூபாவாக சுமார் மூன்று மடங்கால் உயர்வடைந்திருப்பதன் விளைவாக, சராசரியாக நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பம் வறுமைக்கோட்டுக்கு மேல் வாழவேண்டுமாயின், மாதாந்தம் சுமார் 70,000 ரூபா வருமானத்தை ஈட்டவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் அண்மையில் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்தப் பொருளாதார ஆய்வறிக்கையில், நாட்டின் பெரும்பாகப் பொருளாதார மீட்சியானது வறிய மற்றும் நலிவுற்ற சமூகப்பிரிவினரின் வாழ்க்கைத்தரத்தில் இன்னமும் முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Geographic Reference
அதேவேளை அண்மைய காலத்தில் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்த மோதல்கள் மற்றும் அதன் விளைவாக உலக சந்தை மற்றும் உள்நாட்டு எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பன ஏற்கனவே பின்தங்கிய நிலையிலுள்ள மக்களை மேலும் பாதித்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அதன் அண்மைய அறிக்கையில் கரிசனை வெளியிட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க சர்வதேச உணவுசார் கொள்கை ஆய்வு நிலையம் மற்றும் சர்வதேச நீரியல் முகாமைத்துவ நிலையம் என்பன இணைந்து 2024 - 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

அவ்வறிக்கையின் பிரகாரம் நாட்டின் சராசரி வருமானத்தின் அடிப்படையில் 18 சதவீதமான மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, சுகாதாரம், கல்வி மற்றும் முறையான வாழ்வாதாரம் உள்ளிட்ட வசதிகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் 27 சதவீதமானோர் பன்முக வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமாத்திரமன்றி இந்த ஆய்வு முடிவுகளின்படி நாடளாவிய ரீதியில் மூன்றில் ஒரு குடும்பம் உணவுப்பாதுகாப்பற்ற நிலையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வறுமையினால் பெருந்தோட்ட மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன், அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வருமான அடிப்படையிலான வறுமைக்கும், 57 சதவீதமானோர் பன்முக வறுமைக்கும், 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் உணவுப் பாதுகாப்பின்மைக்கும் முகங்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.