உரிய வழி தடை அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 100க்கும் அதிகமான தேக்கு மர பலகைகளை    சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.



அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீதியின் ஊடாக  குறித்த பலகைகள்  கொண்டு வந்த சிறிய உழவு இயந்திரம்  உட்பட சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை (7) மாலை கைது செய்திருந்த நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.



பின்னர் இவ்வாறு சட்டவிரோதமாக வழித்தடை அனுமதிப்பத்திரமின்றி  சிறிய உழவு இயந்திரத்தின் உதவியுடன் கொண்டு வரப்பட்ட பலகைகள் தொடர்பிலான வழக்கு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது  50 ஆயிரம் ரூபா சரீர பிணையில் சந்தேக நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் வழக்கு மறு தவணை இடப்பட்டுள்ளது.



மேலும் நீதிமன்ற உத்தரவிற்கமைய சிறிய உழவு இயந்திரமும் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



இந்த கைது நடவடிக்கையானது மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது  கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய   அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய   அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில்  கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான பொலிஸார்    சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும் குறித்த பலகைகளை   சட்டவிரோதமாக   கொண்டு சென்ற   சந்தேக நபர் தொடர்பில் விரிவான விசாரணைகளை   பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.