இராணுவ தலைமையகத்தை அண்மித்த அதி பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட பகுதியில் பிரதான வீதியில் சட்டத்தரணி படுகொலை செய்யப்படுவாராயின் சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுகிறது என  இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியின் பூதவுடல் பொரளை மலரஞ்சிசாலையில் வைக்கப்பட்டுள்ளது.பூதவுடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி படுகொலை செய்யப்பட்டமை வன்மையாக கண்டித்தக்கது. பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டத்தரணிகள் முன்னிலையாகுவது குறித்து தற்போது மாறுப்பட்ட கருத்துக்கள் பல முன்வைக்கப்படுகின்றன.

ஜனநாயக நாட்டில் சட்டத்தரணிகள் நீதிமன்றில் இருதரப்பிலும் முன்னிலையாகுவார்கள். இதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சட்டத்தரணிகள் ஊடாகவே நீதிமன்றத்தில் முன்னிலையாகுவார்கள். சாட்சிகள் மற்றும் விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டே நீதிமன்றம் இறுதி தீர்மானத்தை எடுக்கும்.

இராணுவ தலைமையகத்தை அண்மித்த அதி பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட பகுதியில் பிரதான வீதியில் சட்டத்தரணி படுகொலை செய்யப்படுவாராயின் சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுகிறது.

முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிராக  குற்றப்பிரேரணை கொண்டு வரப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.அதே போல் இந்த சம்பவத்துக்கு எதிராகவும் அனைத்து சட்டத்தரணிகளையும் ஒன்றிணைத்து எதிர்ப்பு தெரிவிப்போம் என்றார்.