நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலைகள் மற்றும் உலகளாவிய சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க இன்று வியாழக்கிழமை (01) தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிபொருள் விலைகளில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திருத்தங்கள் காரணமாக, போக்குவரத்து மற்றும் உற்பத்திச் செலவுகளில் தாக்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறுகிறது. இதன் விளைவாகவே சந்தையில் சில பொருட்களின் விலைகளில் விலையேற்றத்துக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
உலக சந்தையில் ஏற்படும் மசகு எண்ணெய் விலை மாற்றங்கள் மற்றும் உள்நாட்டின் பொருளாதார நிலைவரங்களுக்கு அமையவே இந்த எரிபொருள் விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதர உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் அதிகரிக்கும் போது சில்லறைச் சந்தையிலும் அதன் தாக்கம் பிரதிபலிப்பது பொருளாதார ரீதியாக இயல்பான ஒரு செயன்முறையாகும்.
இருப்பினும், இவ்வாறான விலை மாற்றங்களால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையையும் சிரமங்களையும் அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளது. பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
மேலும், சந்தையில் செயற்கையான முறையில் பொருட்களின் விலைகளை உயர்த்துவது அல்லது செயற்கையான தட்டுப்பாடுகளை உருவாக்குவது போன்ற செயற்பாடுகளைத் தடுப்பதற்கும், நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாத்து நிலைமையை மேலாண்மை செய்வதற்கும் உரிய பொறிமுறைகள் செயற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.