கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு முன்பாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்  பாதுகாப்பு  அதிகாரியின் மீது கமராவைக் கொண்டு தாக்கிய ஒளிப்பதிவாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்கத்தின் 166 இலட்சம் ரூபா நிதியைத் தவறாகப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்டமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு நேற்று (30) புதன்கிழமை கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய வேளையில், கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வைத்து இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஏ. எச். மகேஷ் ரஞ்சன் என்பவரின் தலையில்,  ஊடக  நிறுவனமொன்றின் ஒளிப்பதிவாளர் தனது கமராவைக் கொண்டு தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அருகிலிருந்த ஏனைய ஊடகவியலாளர்களின் கமராவிலும் பதிவாகியிருந்ததோடு, குறித்த காணொளியும் சமூக ஊடகங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் ஏ. எச். மகேஷ் ரஞ்சன், பொலிஸில் முறைப்பாடு செய்ததை  தொடர்ந்து நாரஹேன்பிட்டிய பகுதியில் உள்ள பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்த  நிலையில், சம்பவத்தன்று  (30) பொலிஸாரால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கமைய, இன்று (1) வியாழக்கிழமை சட்டத்தரணி ஒருவருடன் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான குறித்த ஒளிப்பதிவாளரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.  மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.