விகாரமகாதேவி பூங்காவில் ஒன்றுகூடியுள்ள பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி அநுர குமாரவுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக ஜன பலய கூட்டமைப்பின் தலைவியான கீதிகா தர்மசிங்க தெரிவித்துள்ளார்.
பில்லி சூனியம், தொவில் சடங்குகள் மூலம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலையை ஏழு துண்டுகளாகப் பிளந்து அவரைக் கொலை செய்ய முயற்சிப்பதாகவும், குறித்த பிக்குகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புப் படைகளிடம் கோரிக்கை விடுப்பதாகத் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் அமைப்பான ஜன பலய கூட்டமைப்பின் தலைவியான கலாநிதி கீதிகா தர்மசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஜன பலய அமைப்பினால் நேற்று(21.10.2026) கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே கீதிகா தர்மசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உருவை களிமண்ணால் செய்து அதற்குப் பில்லி சூனியச் சடங்கு செய்யப்படுகின்றது.
மேலும் மகசோன் பிசாசை வரவழைத்து அவரது தலையை ஏழு துண்டுகளாகப் பிளந்து அவரைக் கொலை செய்ய வேண்டும், அவரைக் கொன்றொழிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொலை செய்வதே அவர்களின் நோக்கமாகும்.
அங்கு இருக்கும் கஸ்ஸப போன்ற பிக்குகளுக்கு அவர்களின் செயற்பாடுகளுக்கு பௌத்த தர்மத்தைப் பற்றி, எவ்வித புரிதலும் இருப்பதாக தெரியவில்லை.
எனவே, முதன்மையாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொலை செய்ய முயற்சித்தால், அதனைத் திட்டமிட்டு முன்னெடுத்தல் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அவர்கள் செய்து கொண்டிருக்கும் இந்தச் சடங்குகள் அல்லது நாடகங்கள், தொவில் சடங்குகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
மூடநம்பிக்கை சார்ந்த கேலிக்கூத்தான செயல்கள் குறித்து அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாகும். இத்தகைய கண்காணிப்பு அவசியமானது.
ஏனெனில், சட்டத்தில் ஒரு குற்றத்திற்கான நோக்கம் இருந்ததா என்பதைக் கண்டறிவது மிகவும் முக்கியமான விடயமாகும்.
விகாரமகாதேவி பூங்காவில் ஒன்றுகூடியுள்ள அந்த சமந்தபத்ர, கஸ்ஸப போன்ற பிக்குகளுக்கு அத்தகைய நோக்கம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

ஜனாதிபதியை கொலை செய்வதற்கான திட்டமொன்றை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இது மக்களின் அரசாங்கம். அரசாங்கத்தின் தலைமையை கொலை செய்ய திட்டமிட்டால் அத்தகையோருக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே பொதுமக்கள் என்ற ரீதியில் நாம் இந்த அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.
இது நமது அரசாங்கம். பிக்குகள், எதிர்க்கட்சியினர் காவியுடையின் பின்னணியில் மறைந்து கொண்டு செய்துவரும் இந்த அரசியல் குறித்துக் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.