இந்தியாவின் முன்னணித் தொழில் குழுமமான  ஜியோ பிளாட்பார்ம்ஸின்  IPO பட்டியலிடும் விழாவில், அனந்த் அம்பானியின் உணர்ச்சிப்பூர்வமான உரையாடலினால் முகேஷ் அம்பானி கண் கலங்கிய தருணம் கமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறவன பங்குகள் இந்தியாவின் மும்பையில் உள்ள தேசிய பங்குச் சந்தையில்  நேற்று புதன்கிழமை (28)   பட்டியலிடப்பட்டன. இதுதொடர்பான நிகழ்ச்சியில் மகன் ஆனந்த் உரையாற்றியதைக் கேட்டு நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார்.

ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனம் முதல்முறையாக பொது பங்குகளை வெளியிட்டுள்ளது (ஐபிஓ). ஒரு பங்குக்கு 1,119 ரூபாய் என்ற விலையில் 30,213 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டது. இந்த பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் நேற்று  புதன்கிழமை (28) காலை  பட்டியலிடப்பட்டன. 

இந்நிகழ்வில் ஒரு சிறிய சிறுவனாக அம்பானி கண்ட கனவு, இன்று இலட்சக்கணக்கான இந்தியர்களின் இதயங்களில் வாழும் நிஜமாக மாறியுள்ளது என்று அனந்த் அம்பானி தன் உரையைத் தொடங்கினார். இதைக் கேட்ட 69 வயதான தலைவர் முகேஷ் அம்பானி, தன் மனைவி நீதா அம்பானியுடன் அமர்ந்தபடி, NSE மணி அடிக்கும் விழாவிற்கு முன் ஈஷா, ஆகாஷ் மற்றும் அனந்த் அம்பானியின் உரைகளைக் கேட்டபோது கண் கலங்கி கேட்ட தருணமானது ஒரு நிமிடத்தில்  அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது எனலாம்.

கூட்டாளர்கள், பங்களிப்பாளர்கள் மற்றும் பங்குச் சந்தை நண்பர்களுக்கு நன்றி தெரிவித்த அனந்த் அம்பானி, "பல ஆண்டுகளுக்கு முன்பு, சோர்வாட்டில் உள்ள ஒரு எளிய வீட்டில் ஒரு கனவு தோன்றியது. பணமும் அடையாளமும் இல்லாமல் ஒரு எரிப்பொருள் நிரப்பு நிலையத்தில்  வேலை செய்த ஒரு சிறுவன்" என்று குறிப்பிட்டார். தனது தாத்தா திருபாய் அம்பானியைக் கௌரவிக்கும் வகையில், "ஒரு சாதாரண இந்தியனும் அசாதாரண கனவுகளைக் காண முடியும் என்பதை அவர் (திருபாய் அம்பானி) உலகுக்குக் காட்டினார்" என்று கூறினார்.

 

தொடர்ந்து தனது தந்தைக்கு நன்றி தெரிவித்த அவர், "பின்னர் எங்கள் தந்தை ஒரு கனவு கண்டார்.இந்தியா யாருக்கும் பின்னால் பின்தங்கி இருக்காது. ஜாம்நகரின் வறண்ட நிலத்தில் உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை நிற்கிறது. இந்தியா உருவாக்கும் போது உலகமே அதைப் பார்க்கும் என்பதை அவர் நிரூபித்தார்" என்றார்.

திரைக்குப் பின்னால் உழைக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்த அவர், "ஜியோ குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும்: களப்பணியாளர்கள், மழை மற்றும் வெயிலில் கோபுரங்களில் ஏறும் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள், சேவை ஊழியர்கள், கடைப் பணியாளர்கள், எங்கள் சில்லறை வர்த்தக கூட்டாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என அனைவருக்கும் நன்றி. இன்று நாம் என்னவாக இருக்கிறோமோ, அது உங்களால் தான். இந்த நாள் உங்களுடையது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அனந்த் அம்பானியின் இந்த உரை அரங்கை கைதட்டலாலும் நெகிழ்ச்சியாலும் நிரப்பியது எனலாம். ஜியோ பிளாட் பார்ம்ஸ் இன்று பங்குச் சந்தையில் 21 சதவீதத்திற்கும் அதிகமான பிரீமியத்துடன் அறிமுகமாகி,  ரூபாய் 12.53 இலட்சம் கோடி (இந்திய நாட்டு பெறுமதி)  சந்தை மூலதனத்துடன் இந்தியாவின் இரண்டாவது மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜியோவின் இந்தப் பட்டியலிடலைத் தொடர்ந்து, RIL, ஜியோ பிளாட்பார்ம்ஸ் மற்றும் ஜியோ பைனான்சியல் ஆகியவற்றை உள்ளடக்கிய ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூபாய் 29.90  இலட்சம் கோடியை  (இந்திய நாட்டு பெறுமதி)எட்டியுள்ளது. இதன் மூலம் டாடா  (Tata Group) மற்றும் அதானி குழுமங்களை முந்தி, இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் குழுமமாக ரிலையன்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளது .