அனோஜன் விவகாரத்தில் ஜனாதிபதியும்,அரசாங்கமும் முறையாக தலையிடாமல் இருந்திருந்தால் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும். ரிஷானா நபி விவகாரத்தில் இலங்கை அரசியல் மட்டத்தில் தான் அப்போது சவூதியுடன் தொடர்புக் கொண்டது. ஆனால் அனோஜன் விவகாரத்தில் நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வு பெற முடியும் என்று ஜனாதிபதி அறிவித்து, அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கினார்.
அனோஜனின் வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி சவூதி மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மேல் நீதிமன்றம் சாதகமான தீர்மானத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (20) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
இலங்கையரான அனோஜன் விவகாரம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு முக்கிய விடயங்களை குறிப்பிட விரும்புகிறேன். அனோஜன் விவகாரத்தில் நாங்கள் அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் தான் செயற்பட்டோம்.எவருக்கும் அரசியல் நோக்கம் இருக்கவில்லை.இனம் மற்றும் மதத்தை முன்னிலைப்படுத்தி செயற்படவில்லை.
ஜனாதிபதி, வெளிவிவகாரத்துறை அமைச்சர், சவூதி தூதரகம், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பும் அனோஜன் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் என்பதை நோக்கமாக அமைந்திருந்தது.இவரது விவகாரத்தில் தலையிடுவதற்கும், சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முழுமையான அனுமதியை வழங்கினார்.அதற்கமைவாக நாங்கள் சவூதி அரேபியாவுக்குச் சென்றோம்.
முகமது நபிஸல் அவர்களை அவமதித்த குற்றச்சாட்டுக்காக அனோஜனுக்கு சவூதி மேல் நீதிமன்றம் 5 ஆண்டுகால சிறைதண்டனையையும், 3 மில்லியல் ரியால் அபதாரமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக அனோஜன் தரப்பினாலும், சவூதி தரப்பினாலும் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ' கடவுளின் சட்டம்' என்ற கட்டமைப்பில் இருந்து அனோஜனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிதது.இதன் பின்னர் சவூதி உயர் நீதிமன்றத்தின் மேன்முறையீடு செய்வதே இறுதி மாற்றீடாக இருந்தது. ஏனெனில் கடவுளை நிந்தித்த குற்றத்துக்கு சவூதி மன்னரால் கூட மன்னிப்பு வழங்க முடியாது. அந்த அதிகாரம் மன்னருக்கு கிடையாது.
இதனைத் தொடர்ந்து சவூதியில் உள்ள சட்ட நிறுவனத்துடன் தொடர்புக் கொண்டு உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்தோம்.அரசாங்கமே சகல கட்டணங்களையும் செலுத்தியது. வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவூதி உயர்நீதிமன்றம் இரத்துச் செய்து. வழக்கை மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
கடவுளை நிந்தித்த குற்றம் தொடர்பான தண்டனையை சவூதி நீதிமன்ற கட்டமைப்பு மாற்றியமைக்கவில்லை. அனோஜன் விவகாரத்தில் கிடைக்கப் பெற்ற தீர்ப்பு கொண்டாடப்பட வேண்டியது என்றே கருதுகிறேன். இது தேசிய நல்லிணக்கத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டு. எவரும் இந்த விடயத்தில் இனம் மற்றும் மதத்தை முன்னிலைப்படுத்திச் செயற்படவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இனிவரும் காலங்களில் தமது சேவை வழங்கலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு குறித்த நாட்டின் அடிப்படை சட்டம் மற்றும் கலாசாரங்கள் குறித்து தெளிவுப்படுத்த விசேட நடவடிக்கைகளை பணியகம் முன்னெடுக்க வேண்டும்.
முகமது நபிகள் அவர்கள் தொடர்பில் அனோஜன் முகப்பு புத்தகத்தில் கருத்தொன்றை பதிவேற்றம் செய்து அதனை 10 நிமிடத்துக்குள் நீக்கி, அதன் பின்னர் மன்னிப்பு கோரியுள்ளார்.ஆனால் அனோஜன் தமிழ் மொழியில் பதிவு செய்த கருத்தை ஒருவர் மொழிப்பெயர்ப்பு செய்து அதனை சவூதி பாதுகாப்பு தரப்புக்கு முறைப்பாடு செய்துள்ளார்.அதன் பின்னரே இந்த பிரச்சினை ஏற்பட்டது.
அனோஜன் விவகாரத்தில் ஜனாதிபதியும், அரசாங்கமும் முறையாக தலையிடாமல் இருந்திருந்தால் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும். ரிஷானா நபி விவகாரத்தில் இலங்கை அரசியல் மட்டத்தில் தான் தொடர்புக் கொண்டது. ஆனால் அனோஜன் விவகாரத்தில் நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வு பெற முடியும் என்று ஜனாதிபதி அறிவித்து, அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கினார்.
அனோஜனின் வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி சவூதி மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. சவூதி நாட்டில் சட்டத்துக்கும், மதத்துக்கும் இடையில் நெருங்கிய தொடர்புக் காணப்படுகிறது.ஆகவே அனோஜன் விவகாரத்தில் அந்நாட்டில் மேல் நீதிமன்றம் சாதகமான தீர்மானத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.