கொழும்பு, மகரகம அபேக்‌ஷா புற்றுநோய் வைத்தியசாலையிலுள்ள 'CT Simulator' இயந்திரம் இயங்காமையினால், கதிர்வீச்சு சிகிச்சையைப் பெறவேண்டிய நோயாளர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 'CT Simulator' இயந்திரம் இயங்காமையினால் தற்போது சுமார் 1,500 நோயாளர்கள் கதிர்வீச்சு சிகிச்சையைப் பெறுவதற்காக காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் இருந்த பழைய இயந்திரத்திற்குப் பதிலாக அண்மையில் நிறுவப்பட்ட புதிய 'CT Simulator' இயந்திரம், மருத்துவப் பயன்பாட்டிற்காக கடந்த மாதம் வைத்தியசாலை ஊழியர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த புதிய இயந்திரத்தின் மென்பொருளுக்கும்  கதிர்வீச்சு சிகிச்சை திட்டமிடலுக்குப் பயன்படுத்தப்படும் மென்பொருளுக்கும் இடையிலான பொருந்தாமை காரணமாக உருவான தொழில்நுட்பக் கோளாறினால், புதிய இயந்திரத்தையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சானக தர்மவிக்ரம சுட்டிக்காட்டியுள்ளார்.

சுயாதீனமான தனியார் துறை மூலமாக இக் கதிர்வீச்சு சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதாயின் ஒரு நோயாளிக்கு ரூ. 5 இலட்சம் முதல் ரூ. 20 இலட்சம் வரை செலவாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.