தற்போதைய அரசாங்கம், உழைக்கும் மக்களின் முக்கியமான வாழ்வாதாரப் பாதுகாப்பான, ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி தொடர்பாக முன்னெடுத்து வரும் திட்டங்கள் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நிதிப் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

கொழும்பில் புதன்கிழமை (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கம் நாட்டின் உழைக்கும் மக்களின் பிரதான வாழ்வாதாரப் பாதுகாப்பாக விளங்கும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

தொழிலாளர் உரிமைகள் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளை மீறிய குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிப்பதற்காக இந்த செயன்முறையை ஒரு முத்தரப்பு நடவடிக்கையாகக் காண்பிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தற்போதைய அரசாங்கத்துக்கு எவ்வித நிதி ஒழுக்கமோ அல்லது மேலாண்மை எழுத்தறிவோ இல்லை என்பது தெளிவாகிறது. அத்துடன் எந்தவொரு சூழ்நிலையிலும் உழைக்கும் மக்களின் நிதியை மோசடி செய்வதற்கு இடமளிக்கக் கூடாது.

தற்போது இலங்கை மத்திய வங்கியின் நேரடி மேற்பார்வையிலும், நிர்வாகத்திலும் உள்ள இந்த நிதியை தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்களின் முழுமையான ஆலோசனை அல்லது உடன்பாடுகள் இன்றி அரசாங்கத்தின் விருப்பத்துக்கேற்ப வேறு தரப்பினருக்கு மாற்றுவது பல்வேறுபட்ட இன்னல்களை ஏற்படுத்தும்.

தொழிலாளர்களின் அரசாங்கம் என்ற வாக்குறுதியுடன் அதிகாரத்துக்கு வந்த இந்த அரசாங்கம் இன்று உழைக்கும் மக்கள் மீது எவ்வித அனுதாபமும் காட்டுவதில்லை. ஊழியர் சேமலாப நிதி கணக்குகளின் வட்டி வீதத்தையோ அல்லது தொழிலாளர்கள் பங்களிப்பையோ உயர்த்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், இந்த இரு நிதிகளிலிருந்தும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்போவதாக அமைச்சர்கள் கூறுவது நிதியைச் சூறையாடுவதற்கான ஒரு காரணம் மட்டுமே ஆகும். உண்மையில் உள்நாட்டுக் கடன்களைச் செலுத்துவதற்காகவே இந்த நிதிகளைக் கொள்ளையடிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

தொழிலாளர்களின் உரிமைகளையும், சட்டங்களையும் பலப்படுத்துவதற்கு பதிலாக, தனியார் துறை முதலாளிகளுக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் தொழிலாளர்களை அடிமைகளாக்கும் செயற்பாட்டிலேயே தற்போதைய அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதில் மிகவும் அபாயகரமான விடயம் என்னவென்றால், தற்போது உள்நாட்டு நிறுவனங்களால் வழங்கி வரப்படும் 3 சதவீத பங்களிப்பும் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது என்றார்.