புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களினூடாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான கட்டணத்தைத் தீர்மானிக்கும் நோக்கில், பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்றுடன் (22) நிறைவடைவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இந்தக் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில், எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்கான புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதன்கிழமை (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை மின்சாரச் சீர்திருத்தச் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய, புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் ஊடாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, இலங்கை மின்சார சபையின் தொடர்ச்சி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் போது, அதற்கான விலை மற்றும் விலைச்சூத்திரத்தைத் தீர்மானிக்கும் மற்றும் அங்கீகரிக்கும் பூரண அதிகாரம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கே வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாகவே சூரியசக்தி, காற்று மற்றும் உயிரிப்பொருள் (Biomass) போன்ற புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான பொருத்தமான விலைச்சூத்திரங்கள் தயாரிக்கப்பட்டு ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த விலைச்சூத்திரங்களின் அடிப்படையில் மின்சாரக் கட்டணங்களைத் தீர்மானிப்பது தொடர்பிலான பொதுமக்கள் ஆலோசனைச் செயல்முறையானது சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

இக்காலப்பகுதியில் பல்வேறு தரப்பினருடனும் விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு, கட்டண நிர்ணயத்துக்குத் தேவையான அனைத்துத் தரவுகளும் பெறப்பட்டுள்ளது என்றார்.