“புதிய தலைமைச் செயலகத்தை இங்கே கட்டாதே, அங்கே கட்டு என அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது,” என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை- பட்டினப்பாக்கத்தில் 1,200 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பை முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
அதன்படி, பட்டினப்பாக்கத்தில் உள்ள தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 21.37 ஏக்கர் நிலத்தில், புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு, அரசியல் கட்சிகளும், மீனவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட தடை விதிக்கக் கோரி, சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில், “பட்டினப்பாக்கத்தில் உள்ள தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்ட, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நிதி நெருக்கடியில் உள்ளதாக, தற்போதைய தவெக, தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு இருக்கும்போது, புதிய கட்டிடம் கட்டுவதற்கு 1,200 கோடி செலவு செய்வதை விட, புனித ஜார்ஜ் கோட்டையில், தற்போது இயங்கி வரும் தலைமைச் செயலக கட்டிடத்தைப் புதுப்பித்து பயன்படுத்தினால், இவ்வளவு பெரிய தொகை செலவாகாது.
மக்களின் வரிப் பணமும் சேமிக்கப்படும். அந்த கட்டிடம் நல்ல நிலையில் தான் உள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையம், உயர் நீதிமன்றம், பேருந்து நிலையம், அரசு பொது மருத்துவமனை போன்றவற்றுக்கு அருகில் உள்ள தலைமை செயலகம் இடமாற்றம் செய்யப்பட்டால், பொது மக்கள் வந்து செல்வது மிகவும் கடினமாகிவிடும்” என்றும் தெரிவித்துள்ளார்.
“பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், ஏழை, எளிய மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம் பாதிக்கப்படும். ஏற்கனவே, அங்கிருந்த வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அவ்வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டுவதற்காகப் பொது மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட இருந்தது.
எனவே, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை கைவிட கோரி, செப்.12-ல் தமிழக அரசின் தலைமைச் செயலர், பொது பணித்துறை தலைமை பொறியாளர், தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர் ஆகியோருக்கு அளித்த மனு இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.